tamilnadu

img

எடை போட பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

எடை போட பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை, ஜன. 12-  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடுவதற்கு கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கும் நடைமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வந்தவாசி வட்டாரக்குழுக் கூட்டம், வந்தவாசி விவசாயிகள் சங்க அலுவலகத்தில் ந.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடை போடுவதற்கு ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் என கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கும் நடைமுறையைத் தடுத்து நிறுத்த வேண்டும், தவறு செய்யும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உரக் கடைகளில் வாங்கும் உரங்களுக்கு முறையான ரசீது தராமல் போலியான ரசீதுகளைத் தந்து விவசாயிகளை வஞ்சிக்கும் உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசி வட்டார விவசாயிகளுக்குச் சீரான மின்விநியோகம் வழங்க உறுதி செய்ய வேண்டும், விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை மீண்டும் வந்தவாசி வட்டத்திலேயே நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வந்தவாசி சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு ஒப்பந்ததாரரால் கட்டப்படும் வீடுகளை முழுமையாகக் கட்டி முடித்து, மின் இணைப்பு வழங்க வேண்டும், வந்தவாசியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வேளாண் விற்பனை மையத்தில் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வட்டாரச் செயலாளர் வ.அண்ணாமலை, பொருளாளர் குப்புசாமி, மாநிலத் துணைச் செயலாளர் சரவணன், கரும்பு விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் அரிதாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.