குழந்தைகள் நலன் சேவை விருதுகள் வழங்கினார் முதல்வர்
சென்னை, நவ. 27 - 2025-ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் நலன் சேவை விருதுகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை யன்று வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வழங்கப் பட்ட இந்த விருதுகளுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் அவர் வழங்கினார். அதைத் தொடர்ந்து, இந்து சமய அற நிலையத்துறை சார்பில் 79 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 திருக்கோவில் களில் 24 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு கல்லூரி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் 5 திருக்கோவில்களில் முடிவுற்ற திருப்பணிகள், கல்லூரி ஆய்வகம், செயல் அலுவலர் குடியிருப்புகள் மற்றும் 13 ஆய்வாளர் அலுவலகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 கோடியே 79 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்து, 38 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சமூகநீதி கல்லூரி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கருணை அடிப்படையில் 50 வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், வக்பு வாரியத்திற்கு 9 பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களை புனரமைக்க 4.45 கோடி ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே. சேகர் பாபு, எஸ்.எம். நாசர், சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
