tamilnadu

img

கந்தர்வக்கோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் எம். சின்னத்துரை எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு

கந்தர்வக்கோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் எம். சின்னத்துரை எம்எல்ஏ கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு

புதுக்கோட்டை, நவ. 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை விடுத்த கோரிக்கையை ஏற்று, கந்தர்வக்கோட்டை ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களைத் துவங்கி வைத்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  குறிப்பாக, கந்தர்வக்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்; கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர வேண்டும்; கந்தர்வக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் அரசு பயணியர் மாளிகை கட்டித்தர வேண்டும்; கறம்பக்குடி பேரூராட்சியில் வாகன போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் சுற்றுவட்டப் பாதை அமைக்க வேண்டும்; கந்தர்வக்கோட்டையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்; கந்தர்வக்கோட்டையை மையப்படுத்தி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்துத்தர வேண்டும்; கீரனூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை முதலமைச்சரிடம் அளித்தார். இதில், கந்தர்வக்கோட்டை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மேடையிலேயே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

பிசானத்தூர் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு  ஆலை கூடாது! “

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக கிராமப் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டால், அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான பணிகளை நிறுத்திட உத்தரவிட்டு பொதுமக்களைப் பாதுகாத்திட வேண்டும். நீர்ப்பாசன வழித்தடம் காவிரி ஆற்றின் பிரிவுகளில் ஒன்றான கட்டளை வாய்க்கால் திருச்சி மாவட்டம் பொய்யக்குழு வழியாக அல்லது செங்கிப்பட்டி வழியாக வாய்க்காலில் இருந்து ஆச்சம்பட்டி டேமிற்கு காவிரி நீர் வருகிறது. இங்கு இருந்து நத்தமாடிப்பட்டி வழியாக மின்னாத்தூர் பெரிய குளம் வரை ஆற்று வாய்க்கால் அமைத்தால் 1403 ஏக்கர் ஆயக்கட்டு பயனடையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் கந்தர்வக்கோட்டை, குன்றாண்டார்கோவில், கறம்பக்குடி வட்டாரங்களில் நீராதாரம் பாதுகாக்கப்படுவதோடு, விவசாயமும் செழிப்படையும். எனவே, இப்புதிய ஆற்றுப்பாசனத் திட்டத்தை அமைத்து லட்சக்கணக்கான வேளாண் குடிமக்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றும் முதல்வரிடம் அளித்த மனுவில், எம். சின்னத்துரை எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.