tamilnadu

img

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் எதிர்காலச் சவால்களும் - எஸ்.கவிவர்மன்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் எதிர்காலச் சவால்களும் - எஸ்.கவிவர்மன்

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்  (Artificial Intelligence) சம்பந்தமான உலகளாவிய முதல் கூட்டம் 2024 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய  ஐநா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ட ரெஸ்  ‘மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அமைதி மற்றும் பாது காப்பிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக அமையும்” என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். செயற்கை நுண்ணறிவு என்பது மிக வேகமாக வளர்ந்து வரும், எந்திரங்களை சிந்திக்க  வைக்கும் தொழில்நுட்பமாகும். மனிதனைப் போலவே எந்திரங்களும் சிந்தித்து செயல்படும் திறனை கொண்டதாக உருவாக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து துறைகளை யும் ஆக்கிரமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மனித மூளையை விட மிக வேகமாகவும் துல்லிய மாகவும் செயல்படுகிறது. பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டில் உதவுகிறது. மருத்துவம், அண்டவெளி ஆய்வுகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகுதித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மேம்பட்ட தகவல்களைத் தருவது போன்ற ஏராளமான நன்மைகள் உண்டு  என்பதை மறுக்க முடியாது. விண்வெளி ஆய்வில் மிகத் துல்லியமாகச் செயல்படுவதால் மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்ட முடிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சமூக ஊடகம், மின் வணிகம், இணையதளத் தேடல்கள் என தனி பயனாக்கப்பட்ட சேவைகளை ஒவ்வொரு தனிப் பயனருக்கும் வழங்குகிறது.

சவாலாக மாறும் அபாயம்!

மனிதர்களால் செய்ய முடியாத ஆபத்தான பணிகளை பேரிடர் காலங்களில் செய்ய உதவுகிறது.  சுற்றுச்சூழல் போன்ற சமூக நலன் சார்ந்த பணிகளில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களான காடுகள், மலைமுகடுகள், கடல் அடிப்பரப்பு போன்றவற்றில்  இத்தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவிற்கு ஆய்வுகளை மேற்கொள்ள உதவுகிறது. இவற்றையெல்லாம் தாண்டியும் பல நன்மைகள் இருந்த போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மிகப் பெரிய சவாலாக மாறும் அபாயம் உள்ளது. அனைத்து துறைகளிலும் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது ஆகிவிடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தவறாகப் பயன் படுத்தப்பட்டால் நாட்டின் பாதுகாப்பிற்கே அது அச்சுறுத்தலாக அமையும். இத்தொழில் நுட்பம் இணையம் முழுவதும் விரவிக் கிடக்கும் தனிமனிதத் தரவுகள் உள்ளிட்ட பெரிய அள விலான தரவுகளை சேமித்துச் செயல்படுத்து கிறது.  இது அனைத்து தரவு பாதுகாப்புப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் தன் இயக்க ஆயுதங்கள் மனித இனத்திற்கே அழிவை விளைவிக்கலாம். செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் பெரிய நிறுவனங்கள் ஓர் அதிகார மையமாக மாறும் அபாயமும் உள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மிக சக்தி வாய்ந்தது. இது நன்மை மற்றும் தீமைகளை கொண்டுள்ளது. அதன் முழுமை யான பயன்பாடு வறைமுறைகளுக்கு உட்பட்ட தாக இருக்க வேண்டும். தனிப் பயனர்கள் பயன் படுத்துவதற்கு ஏற்றதாக ஒரு திறந்தவெளியாக ஏஐ தொழில்நுட்பம் இருப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல. எல்லா பணிகளையும் செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்துக் கொண்டால் அது மனித குலத்தின் உழைக்கும் திறனையும் அறி வையும் மட்டுப்படுத்தி விடும். செயற்கையாக போட்டோகிராப் உருவாக்குவது, வீடியோ உருவாக்குவது என்பதெல்லாம் மிக எளிது.  

மூன்று நிமிட குரலில்...

நீதிமன்றத்தில்  ஒரு வழக்கறிஞர் வழக்காடிக் கொண்டிருந்தால் அவர் குரலை எழுத்து வடிவமாக ஏஐ மாற்றிக் கொண்டே இருக்கும் நடைமுறை நீதிமன்றத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.  ஒருவர் பேசாததை பேசியது போல் கொண்டு வர முடியும். ஒருவர் குரலை மூன்று நிமிடம் ரெக்கார்ட் செய்தால் போதும். அதை  வைத்து தத்ரூபமாக அவர் பல மணி நேரம் பல பாவனைகளில் பேசியது போலவே பேச வைக்க முடியும். கல்வித்துறையில் ரோபோக்கள், மருத்துவமனையில் ரோபோக்கள், ஆலைகள் தொழிற்சாலைகளில் ரோபோக்கள். அதற்கு ஓய்வு தேவையில்லை. விடுப்பு தேவையில்லை. மனிதர்களை விட பல மடங்கு செயற்கை நுண்ண றிவு திறனுடன் ரோபோக்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டன.

அனைத்துத் துறைகளையும் ஆட்கொள்ளும் ஏஐ...

வைரமுத்து, மேத்தா, அப்துல்ரஹ்மான், வாலி போன்ற இன்னும் பிற தமிழ் கவிஞர்களுக்கும் சுஜாதா, ஜெயகாந்தன், வசந்தி, அம்பை போன்ற எழுத்தாளர்களுக்கும் இனி  வேலை இல்லாமல் போகலாம். ஒரு தலைப்பைக் கொடுத்து ஒரு சிறுகதை வேண்டும், ஒரு தலைப்பை கொடுத்து ஒரு கவிதை வேண்டும் என்றால் கண் இமைக்கும் நேரத்தில் தந்து விடு கிறது. இனி இளையராஜாவோ, ஏ.ஆர்.ரகுமான், தேவாவோ தேவையில்லை. பாடல் வரிகளை  பதிவிட்டு இதற்கு ஒரு மெட்டமைத்து இசை யமைத்து தரவேண்டும் என்று கட்டளையிட்டால் உடனே புதிய மெட்டுடன் பாடல் தயாராகி விடுகிறது. அப்படியான ஏஐ  தொழில்நுட்ப செய லிகள் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு லச்சினை உருவாக்க வேண்டும் என்றால் ஒரு ஓவியர் தேவை. ஆனால் இப்போது அவர் களுக்கு வேலை இல்லை. என்ன மாதிரியான இலச்சினை வேண்டும் என நாம் குரல் பதிவிட்டால் ஒரு நிமிடத்தில் நாம் எதிர்பார்த்ததை விட அழகான லச்சினை வந்துவிடும். எதிர்கா லத்தில் உலகை ஆளப்போவது எந்திரங்களாகத் தான் இருக்குமோ என்ற அளவிற்கு செயற்கை  நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் தாக்கம்  அனைத்துத் துறைகளையும் ஆட்கொண்டு வருகிறது.

ஆழ்துளைக் கிணறு ஆபத்தும் மனிதக் கழிவகற்றும் கொடுமையும்

நவீன முதலாளித்துவம் பெற்றெடுத்த அறி வியலின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு இந்த செயற்கை நுண்ணறிவு என்பதில் சந்தேக மில்லை. ஆனாலும், தனிப்பயனர்கள் இதை தவ றாக பயன்படுத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஐடி நிறுவனங்களில் மிகப்பெரிய அளவு வேலை இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்ட்ராய்டு செல்போன் உபயோகிக்கத் தெரிந்தால் போதும். கடினமான கம்ப்யூட்டர் கோடிங் உட்பட கணினி அறிவு இல்லாத ஒருவரால் எழுத முடியும். ஆக கணித அறிவியலில் பட்டம் படித்தவர்க்கு வேலை இல்லை. நல்ல இலக்கியவாதி, நல்ல ஓவியர், பன்முகத்தன்மை கொண்ட செயல்பாட்டாளர் என்றெல்லாம் தனி மனித சாதனைகளை கொண்டாட இனி வாய்ப்பிருக்குமா என்பதெல் லாம் கேள்விக்குறிதான். வகுப்பறைகளில் ரோபோ டீச்சர், வாகன ஓட்டியாக ரோபோ, மருத்துவ அறுவை சிகிச்சை யில் ரோபோ என்று இப்போது உலகில் பல நாடு களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமைக்கு முழுமையாக முடிவுகட்ட  இந்த வளர்ச்சியால் முடியவில்லை. ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை பல நாள்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை  இந்த அறிவியலால் என்பது நமது கடந்தகால அனுபவமாகவும் ஏக்கமாகவும் உள்ளது.