ஆபாசமாக பேசிய பேராசிரியர் மாணவர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர், மே 14- கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவியின் வருகை பதிவு குறைவாக இருப்பதாக கூறி கணிதத் துறை மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர் அருள் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூரில் புதன்கிழமை (மே 14) மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, முற்போக்கு மாணவர் கழகம் (விசிக) மாணவர் அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சௌமியா தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் குமரவேல், மாவட்டத் தலைவர் பூபதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பவின், கனிஷ்கர், சுகினா பாரதி சுதின், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி யின் மாவட்டச் செயலாளர் பால்ராஜ், மாவட்ட இணைச் செயலாளர் வெற்றி தமிழ், நிர்வாகக் குழு உறுப்பினர் சரண்ராஜ், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட கல்லூரி துணை ஒருங்கி ணைப்பாளர் கிருபாநிதி, மாவட்ட அமைப்பாளர் மணிகண்ட ராஜ், மாவட்டத் துணை அமைப்பாளர் பீமாராவ் ராம்ஜி ஆகியோர் உரையாற்றினர். ஆபாசமாக பேசிய பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும், மேலும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
ராணிப்பேட்டை, மே 14 - தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகமான ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் மற்றும் பி.இ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். எனவே மேற்காணும் கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் வெள்ளிக்கிழமை (மே16) காலை 10 மணிக்கு ஆற்காடு சாலை, பழைய பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வருகை புரிந்து கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.