மதுரை:
மதுரை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்த அங்கன்வாடி பணியாளர் நியமனம் செல்லாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், மதுரை ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை வலையப்பட்டியை சேர்ந்த சம்சாத் பீவி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” கடந்த 2017- ஆம் ஆண்டு வலையன்குளம் அங்கன்வாடி பணியாளருக்காக விண்ணப்பித்திருந்தேன். பணி காலியாக உள்ள அங்கன்வாடியில் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆனால் வேறு கிராமம் அதாவது பெருங்குடியைச் சேர்ந்த பல்கிஸ் பர்வீன் என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் பணி நியமனம் வழங்கியுள்ளார்.
கடந்த ஜூன் 4- ஆம் தேதி மதுரை ஆட்சியர் வெளியிட்ட அங்கன்வாடி பணியாளர்களுக் கான பணி நியமனத்தை இணையதளத்தில் வெளியிடாமல், அவசர அவசரமாக பணி நியமனம் வெளியிட்டுள்ளார். இது சட்டத்திற்குப் புறம்பானது. எனவே வலையன்குளம் அங்கன்வாடி பணியாளரை மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்தது செல்லாது என உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை புதனன்று விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன்- 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.