tamilnadu

img

அமெ. - இஸ்ரேலால் துயரமாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை அறிவோம்! -

எங்கோ பூமி பந்தின் ஒரு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைக்கு இங்கே இந்தியாவில் குரல் கொடுப்பதில் என்ன தேவை இருக்கு…இவங்களுக்கு இதுவே லேலை..கொடிய பிடிச்சுகிட்டு வெட்டியா குரல் எழுப்பறது… என்னவோ போங்க ..என பலர் பேசக் கூடும்.. கேலி செய்வார்கள். அதுவும் பாலஸ்தீனம் பத்தி இங்க பேசுறது எல்லாம் ஒரு வித நோய் என கூட வாய் கூசாமல் பேசுவார்கள்… இவர்களின் குரலாகவும் நாம் எழுப்ப போகும் குரலுக்கு வலு சேர்க்கும் இரண்டு புத்தகங்களை “பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

உண்மை வரலாற்றை சொல்கிறார் சாமிநாத சர்மா

 பாலஸ்தீனம் எனும்நாடு உருவான வரலாற்றை, அதன் பின்னணியை சுமார் 80  ஆண்டுகளுக்கு முன்னரே மிக நேர்மையாக விளக்கியுள்ளார் திரு. சாமிநாதசர்மா அவர்கள். ஏன் யூதர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்க, அதை பாதுகாக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தது என்பதையும், பாலஸ்தீனத்தின் பூர்வகுடிகளான அரேபியர்களின் வாழ்நிலை, செழிப்பான அந்த பகுதியை எப்படி மேலும் வளம் பெற வைத்தார்கள் என்பதை மிக எளிமையாக விளக்குகிறார். இப்போது போல் அதி நவீன தொழில் நுட்ப வச்திகள் இல்லாத காலத்திலேயே பாலஸ்தீனத்தின் உண்மை வரலாற்றை , யூதர்களின் அடாவடி குடியேற்றம் அதன் மூலம் நிகழ்ந்த புவி மற்றும் வாழ்வியல் சார் மாற்றங்கள் என ஒரு சேர எல்லாமே இந்த நூலில் பதிவு செய்துள்ளார் . இந்த நூலை வாசிக்கும் போது எவ்வளவு தொலைநோக்கோடும் கிடைத்த தகவல்களை கொண்டு நேர்த்தியாக தொகுத்துள்ளார். அம்மண்ணில் திட்டமிட்டு நடந்த கலகங்கள், அதையொட்டி நடந்த நிகழ்ச்சிகள் என அனைத்துமே பதிவாகி யுள்ளது. துவக்க கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு என எல்லாமே இந்த நூலில் இருப்பது ஒரு வரலாற்றை புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும். 

இடதுசாரி பார்வையில்

கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு பிரச்சனை… பல்லாயிரம் அப்பாவி மக்களை கொன்ற சதி, ஏதுமறியா குழந்தைகள், நோயாளிகள், என போரின் எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாத இஸ்ரேலின் அடாவடித்தனம், முழுமையாக பின் நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் என தற்கால உண்மை தரவுகளோடு தோழர் இ.பா. சிந்தன் எழுதி வந்துள்ள  பாலஸ்தீனம் – நம்மால் என்ன செய்ய முடியும்  எனும் 145 பக்க புத்தகம் சமீபத்தில் தமுஎகச சென்னை மண்டலம் இணைந்து நடத்திய பாலஸ்தீன ஆதரவு நிகழ்ச்சிக்காக புதிய தரவுகளோடு வந்துள்ள இந்த நூலில் நுண்ணியலாக இடது சாரி பார்வையோடு உலகுக்கு தெரிய வேண்டிய பல உண்மைகளை பதிவாக்கியுள்ளார் நூலாசிரியர். 

பாலஸ்தீனம் எனும் ஆக்கிரமிப்பு தேசம்

பெரும் யூத முதலாளிகளின் சூழ்ச்சி, தொடர் வஞ்சகம், ஆங்கில மற்றும்  அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நேர்முக மற்றும் மறைமுக ஆதரவு, வெள்ளந்தி களாக இருந்த பூர்வகுடி அரேபியர்களை, கடன் வலையில் சிக்க வைத்த சதி, அந்நாடு முழுவதும் பெரும்பான்மையான நிலங்களை அபகரிக்க செய்யப்பட்ட மூன்றாம் தர வேலைகள், தங்கள் உடைமைகளை யூதர்கள் கொள்ளையடிக்கிறார் கள் என்பதையே  புரிந்து கொள்ளாத அப்பாவி மக்களை பொருளாதாரமாக மட்டு மல்லாமல், நிர்வாக ரீதியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அம்மக்களை சொல்லொண்ணா துயரங்களுக்கு எப்படி தள்ளினார்கள் என்பதை வாசிக்கும் போது நிச்சயம் நெகிழ்வோம்.  தங்கள் மீதான கொடுமைகளை எதிர்த்து ஒன்றுபட்டு போராடும் போது ஏகாதிபத்தியங்கள் செய்த சம்ரச ஏற்பாடுகளை இஸ்ரேல் கொடுங்கோலர்கள் எப்படியெல்லாம் மீறினார்கள் என்பதை சொல்லும் அத்தியாயங்களை அவ்வளவு எளிதாக கடக்க முடியாது. 

என்ன செய்ய வேண்டும்? 

இந்த நூலில் பல்வேறு உண்மை தரவுகளை தேடி எடுத்து இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் எப்படி தொடர் வர்த்தக உறவுகள் ஆயுத விற்பனை மூலம் நடக்கிறது  என்பதை தோழர் சிந்தன் விளக்குகிறார். அதிர்ச்சியூட்டும் மேலும் பல தகவல் களும் இருக்கிறது. உயர் கல்வி எனும் பேரில் ஐஐகூ கல்லூரிகள் அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் புது டில்லி கல்லூரிகள் எப்படி இஸ்ரேலோடு ஒப்பந்தம் போட்டு அந்த கொடுமைக்கார தேசத்திற்கு உதவி செய்கிறது என்பதை ஆதாரங் களோடு பதிவு செய்கிறார்.  தேச தந்தை காந்தி யூதர்களுக்கான தேசம் அமைக்க வேண்டுமெனில் அது அரேபிய பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க கூடாது, அப்படி செய்யும் நடவடிக்கைக்கு இங்கிலாந்து அரசு ஆதரவு தருமானால் நான் நிச்சயம் அதை எதிர்ப்பேன்.போராடுவேன் என்று 1948ல் நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சொல்கிறார்.   ஆகவே இந்த நூல்கள் இரண்டும் வெறும் வாசிப்பிற்காக மட்டுமல்ல,வலதுசாரி கருத்தியலை எதிர்த்த சமருக்கான ஆயுதம்.  வாசித்து பிரச்சாரம் செய்வோம்..  

பாலஸ்தீனம்
ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.80

பாலஸ்தீனம்: நம்மால் என்ன செய்ய முடியும்?
ஆசிரியர் : இ.பா.சிந்தன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.140