1944 - மாபெரும் விவாத அரங்கம் - பி.சி.ஜோஷி
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் 1944இல் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. மகாத்மா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷிக்கு ஐந்து கேள்விகள் கொண்ட கடிதம் எழுதினார். “மக்கள் யுத்தம்” என்றால் என்ன? இந்திய மக்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்கள் என யாருக்காக? கட்சியின் நிதி ஆதாரம் என்ன? தொழிலாளர் போராட்டங்களில் போலீசுக்கு உதவுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையா? காங்கிரசை உடைக்க முயல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டு சரியா? வெளிநாட்டு உத்தரவுகளை பின்பற்றுகிறீர்களா? - என காந்தியின் கேள்விகள் அமைந்தன. ஜோஷி துணிச்சலுடன் பதிலளித்தார். “மக்கள் யுத்தம் என்பது உலக மக்கள் அனைவருக்குமானது. நேச நாடுகளின் அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் வேறுபாடு உண்டு. சர்ச்சிலின் நோக்கமும் ஸ்டாலினின் நோக்கமும் வேறு” என்றார். கட்சியின் கணக்குகளை காந்திக்கு காட்ட முன்வந்தார். மோகன் குமாரமங்கலம் மூலம் வார்தா ஆசிரமத்திற்கு கணக்குப் புத்தகங்களை அனுப்பி வைத்தார். காந்தி அவற்றை பரிசீலித்து திருப்தி அடைந்தார். ஆனால் காந்தி மீண்டும் ஒரு கடிதம் எழுதினார். அதில் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தையும், கட்டுப்பாட்டையும் பாராட்டியதோடு, காளேஸ்வரராவ் என்ற காங்கிரஸ் தலைவர் கம்யூனிஸ்டுகள் மீது எழுப்பிய குற்றச்சாட்டுகளையும் சேர்த்து அனுப்பினார். காளேஸ்வரராவின் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. கொலை, வன்முறை போன்றவற்றை ஊக்குவிப்பதாகவும், மதச்சார்பற்ற வாழ்க்கை முறையை திணிப்பதாகவும், காங்கிரஸ் இயக்கத்தை உடைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஜோஷி அவற்றை ஒவ்வொன்றாக மறுத்தார். “ராஜாஜி எங்கள் கம்யூனில் உணவு உண்டிருக்கிறார். சரோஜினி நாயுடு எங்கள் கலைத்திறனை பாராட்டியுள்ளார். எங்கள் கட்சியில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்கள். காங்கிரசை விட அதிக பெண் தொண்டர்கள் எங்களிடம் உள்ளனர்” என்று விளக்கமளித்தார். இந்த கடிதத்தில்தான் முதன்முறையாக காந்தியை “தேசப்பிதா” என்று அழைத்தார் ஜோஷி. பின்னர் இந்த சொற்றொடர் நாடு முழுவதும் பிரபலமானது. காந்தி செப்டம்பர் 15-இல் பதில் எழுதினார். “உங்கள் கடிதத்திற்கு நன்றி. உங்கள் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இனி நேரடியாக தொந்தரவு தர மாட்டேன். ராஜாஜி, சரோஜினி தேவி போன்ற பொது நண்பர்கள் மூலம் உங்களைப் புரிந்து கொள்கிறேன்” என்று நட்புணர்வோடு முடித்தார்.
1946 - முதல் சட்டமன்ற வெற்றி - அனந்தன் நம்பியார்
1946-இல் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. முதன்முறையாக கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் அந்த தேர்தல் முழு ஜனநாயகம் கொண்டதல்ல. சொத்து, கல்வித் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு சில இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் 108 வேட்பாளர்களை நிறுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. தமிழகத்தில் பி.ராமமூர்த்தி (கோயம்புத்தூர்), மணலி கந்தசாமி (மன்னார்குடி), குப்புசாமி, டாக்டர் அண்ணாஜி (ஹோசூர்), எம்.கல்யாணசுந்தரம் (திருச்சி), கே.அனந்தநம்பியார் (ரயில்வே), பி.ஜீவானந்தம் (சென்னை), ஆர்.கே.சாந்துலால் (மதுரை) ஆகியோர் களம் கண்டனர். முதல் வெற்றியாக, ரயில்வே தொழிலாளர் தொகுதியில் அனந்தநம்பியார் காங்கிரஸின் வி.கே.ஆதிகேசவலு ரெட்டியாரை 7,900 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 12,974 வாக்குகள் பெற்ற இந்த வெற்றி தொழிலாளர் இயக்கத்திற்கு பெரும் உந்துதல் அளித்தது. மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாந்துலால் 6,000 வாக்குகள் பெற்றார். பெரும்பாலான கைத்தறி நெசவாளர்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலையில் இது குறிப்பிடத்தக்க எண்ணிக்கை. இந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி எட்டு இடங்களை வென்றது. ரத்தன்லால் பிரம்மன், ஜோதிபாசு, ரூப்நாராயண் ராய் (வங்காளம்), எஸ்.ஏ.டாங்கே, ஷிவ் விஷால் (பம்பாய்), பில்லலமரி வெங்கடேஸ்வரலு (ஆந்திரா), அனந்தநம்பியார் (சென்னை), டி.ஜே.எம்.வில்சன் (ஆந்திரா) ஆகியோர் வெற்றி பெற்றனர். மொத்தம் பதிவான 26 லட்சம் வாக்குகளில் 5 லட்சம் வாக்குகளை (19%) பெற்றது சாதனை. சென்னை சட்டமன்றத்தில் அனந்தநம்பியாரும் வெங்கடேஸ்வரலுவும் தொழிலாளர், விவசாயிகள் பிரச்சினைகளை துணிச்சலுடன் எழுப்பினர். ஆனால் ஓராண்டுக்குப் பின் அடக்குமுறையால் தலைமறைவு வாழ்க்கைக்கும் சிறைக்கும் ஆளாயினர். இவ்வாறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், முதல் தேர்தலிலேயே கம்யூனிஸ்ட் கட்சி தனது வலிமையை நிரூபித்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியிலும் மக்களுக்காகப் போராட முடியும் என்பதை காட்டியது.
1950 - முதலில் முகிழ்த்த தோழமை - பெரியார்
அடக்குமுறையின் இருண்ட நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒளியேற்றிய பெருமை திராவிடர் கழகத்தையே சாரும். பெரியாரின் ‘விடுதலை’ இதழ் மட்டுமே துணிச்சலுடன் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. 1950 பிப்ரவரி 11-இல் சேலம் சிறையில் 22 கம்யூனிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை கண்டித்து ‘விடுதலை’ தீவிர தலையங்கம் எழுதியது. “பலிப்பட்ட 22 வீரர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை. மரக்கட்டைகளாகவா கருதுகிறீர்கள்? அவர்களுக்கும் குடும்பம், உறவுகள் உண்டு. விசாரணைக் குழுவில் கம்யூனிஸ்ட் பிரதிநிதி அல்லது தொழிற்சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியாராவது இருக்க வேண்டும்” என்று துணிச்சலாக எழுதியது. பெரியார் கண்டனக் கூட்டங்கள் நடத்த அறைகூவல் விடுத்தார். 1951-இல் கட்சித் தடை நீக்கப்பட்டபோது, தேர்தல் உடன்பாடு ஏற்பட்டது. தலைமறைவில் இருந்த பி.ராமமூர்த்தி பெரியார், குத்தூசி குருசாமியுடன் ரகசியமாக சந்தித்துப் பேசினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா தமிழகம் முழுவதும் “ரத்தக்கண்ணீர்”, “முருகன்”, “பேப்பர் நியூஸ்” நாடகங்கள் நடத்தி நிதி திரட்டினார். பரமக்குடி, திருப்பூர், பொள்ளாச்சி, மதுரை, சென்னை என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். வண்ணாரப்பேட்டையில் ஜீவாவுக்கு பிரச்சாரமும் செய்தார். புதுக்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான எம்.கல்யாணசுந்தரம், குத்தூசி குருசாமிக்கு நன்றி கடிதம் எழுதினார். “திராவிடர் கழக - கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கியம் தமிழ்நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி” என்று போற்றினார். 1965-இல் குத்தூசி குருசாமி மறைந்தபோது, செஞ்சட்டை அணிந்த தொழிலாளர்கள் அயனாவரம் சுடுகாடு வரை அணிவகுத்து மரியாதை செலுத்தினர். ஏனெனில் தடைக்காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு புகலிடம் தந்த பெருந்தன்மை குத்தூசியாருக்கு உண்டு. மாஸ்டர் ராமுண்ணி - கிருஷ்ணாபாய் (ரமணிபாய்) தம்பதியரும் தலைமறைவு தோழர்களுக்கு உணவும் தங்குமிடமும் அளித்து உதவினர். இவ்வாறு மனிதநேயத்தின் உச்சத்தை காட்டிய திராவிடர் கழகத்தின் உதவிகளை தமிழக கம்யூனிஸ்ட் இயக்கம் என்றும் மறக்காது என வரலாறு பதிவு செய்கிறது.
1951 - தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநில மாநாடு -
‘சோஷலிச இந்தியா’ என்ற கனவுடன் எழுந்த கம்யூனிஸ்டுகள், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கொடூர அடக்குமுறைகளை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டனர். 1920-ல் தாஷ்கண்டில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பயணம், சிதறிக்கிடந்த புரட்சிகர சக்திகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் 1925-ல் கான்பூரில் முதல் அகில இந்திய மாநாட்டைக் கண்டது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமையிலான அந்த மாநாடு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் திசையை வகுத்தது. தென்னகத்தின் முன்னோடி தோழர்கள் அமீர் ஹைதர்கான், எஸ்.வி.காட்டே, பி.சுந்தரையா ஆகியோரின் அயராத உழைப்பின் பயனாக, 1936-ல் தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கிளை பிறந்தது. தோழர்கள் பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், ஜீவா, ஏ.எஸ்.கே.அய்யங்கார் ஆகியோர் அடங்கிய இந்த முதல் கிளை, தமிழகம் முழுவதும் புரட்சியின் விதைகளைத் தூவியது. 1943-ல் கட்சியின் முதல் அகில இந்திய மாநாடும், 1948-ல் இரண்டாவது மாநாடும் நடைபெற்ற பின்னர், தமிழ்நாட்டில் முதல் மாநில மாநாட்டை நடத்த முயன்ற போதும், ஆட்சியாளர்களின் அடக்குமுறை காரணமாக அது சாத்தியமாகவில்லை. இந்த பின்னணியில், 1951-ல் தமிழ்நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் மாநாடு நடைபெற்றது. 1951 ஜூன் 9 முதல் 12 வரை நடந்த கன்வென்ஷனில், கோவை மாவட்ட குழுவின் செயலாளர் தோழர் கே.வி.சின்னையன் தலைமை தாங்கினார். பெரியாரின் நெருங்கிய தோழர் சாமி சிதம்பரனார், சக்கரை செட்டியார் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். அன்று நினைவுகூரப்பட்ட தியாகிகள் வரிசை நெஞ்சை உருக்கியது: வேலூர் சிறையில் உயிர்நீத்த ஐ.வி.சுப்பையா, திருச்சியில் கொல்லப்பட்ட களப்பால் குப்புசாமி, மதுரை சிறையில் தூக்கிலிடப்பட்ட பாலுசாமி, தடியடியில் வீழ்ந்த ராமநாதன், சோரகை போராட்டத்தில் உயிர்நீத்த பெருமான், சென்னை சிறையில் மறைந்த அன்னை லட்சுமி (பாப்பா உமாநாத் அவர்களின் தாயார்), சேலம் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்ட 22 தோழர்கள், கடலூர் சிறையில் உயிர்நீத்த 4 தோழர்கள், மதுரை மாரி, மணவாளன், தில்லை வனம், திருப்பூர் பழனிசாமி, தஞ்சாவூர் இரணியன், சிவராமன், ஆறுமுகம் ராஜூ - இவர்கள் ஒவ்வொருவரும் தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உயிர்த் துளிகள். தோழர் ஏ.கே.கோபாலன் கேரள அனுபவங்களை பகிர்ந்து, காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு மக்களிடையே வளர்ந்து வருவதையும், ஜனநாயக ஐக்கிய முன்னணி அமைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். தோழர் வி.பி.சிந்தன், மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வழங்கிய அறிக்கையில், நேரு அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மாற்றி, உண்மையான ஜனநாயக ஆட்சியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை முன்வைத்தார். மூன்று நாள் ஆழமான விவாதங்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் புரட்சிகரமானவை: ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவ-பெரும் முதலாளித்துவ ஆதிக்கத்தை எதிர்த்து, அரசியல்-பொருளாதார சுதந்திரம் கோரும் உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது; நஷ்டஈடின்றி ஜமீன்தாரி முறையை ஒழித்து விவசாயிகளுக்கு நிலம் வழங்குவது; காமன்வெல்த் உட்பட அனைத்து பிரிட்டிஷ் கட்டமைப்புகளிலிருந்தும் விடுபட்டு, பிரிட்டிஷ் மூலதனத்தை தேசியமயமாக்குவது; தமிழர், மலையாளி, ஆந்திரர், கன்னடர் என அனைத்து தேசிய இனங்களும் சுயவிருப்பில் இணைந்த குடியரசை உருவாக்குவது; சுதேசித் தொழில்களை வளர்ப்பது; சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கடும் தண்டனைகள்; அனைவருக்கும் கல்வி உரிமையும் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடும்; தாய்மொழிக் கல்வியும் ஆட்சி மொழியும்; மதச்சார்பற்ற அரசு; எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள். கட்சியின் மாநிலச் செயலாளராக மோகன் குமாரமங்கலம்,உதவிச் செயலாளராக எம்.ஆர்.வெங்கட்ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ், ப.ஜீவானந்தம், எம்.கல்யாண சுந்தரம், சி.எஸ்.சுப்பிரமணியம், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் மாநிலக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1952 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி பெரும் வெற்றி பெற்றும், காங்கிரஸ் சூழ்ச்சி வழியில் ஆட்சியைக் கைப்பற்றியது.
1964 - மார்க்சிஸ்ட் கட்சி உதயம்; 32 தலைவர்களின் துணிவும் 52 தமிழக தலைவர்களும் -
புரட்சிகர இயக்கத்தின் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது அந்த வரலாற்று நிகழ்வு. கொள்கை விலகல்களையும், தவறான அணுகுமுறைகளையும் எதிர்த்து, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் 32 பொதுக்குழு உறுப்பினர்கள் துணிச்சலுடன் வெளிநடப்பு செய்தனர். இந்த வீரத் தோழர்களே பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற புதிய அத்தியாயத்தை எழுதினர்.
வரலாற்றில் தடம் பதித்த அந்த முப்பத்திரண்டு தலைவர்கள்:
ஆந்திரத்தின் போர்க்குரல்கள்:
பி. சுந்தரையா, எம். பசவபுன்னையா, டி. நாகிரெட்டி, எம். ஹனுமந்தராவ், வெங்கடேஸ்வர ராவ், என். பிரசாத ராவ், ஜி. பாப்பனைய்யா
கேரளத்தின் போராளிகள்:
இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன், ஏ.வி. குன்னாம்பு, சி.எச். கனாரன், இ.கே. நாயனார், வி.எஸ். அச்சுதானந்தன், இ.கே. இம்பிச்சிபாவா
வங்கத்தின் வீரர்கள்:
புரமோத் தாஸ் குப்தா, முசாபர் அகமது, ஜோதிபாசு, அப்துல் ஹலீம், ஹரே கிருஷ்ண கோனார், சரோஜ் முகர்ஜி
தமிழகத்தின் தலைவர்கள்:
பி. ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்ராமன், என். சங்கரையா,
கே. ரமணி
வடஇந்தியாவின் வழிகாட்டிகள்:
ஹரிகிஷன் சிங் சுர்ஜித், ஜெகஜித் சிங் லயால்புரி, டி.எஸ். டபியாலா, டாக்டர் பாக் சிங், ஷியோ குமார் மிஸ்ரா, ஆர்.என். உபாத்யாயா, மோகன் புனாமியா, ஆர்.பி. சரஃப்
அந்த நேரத்தில் தோழர் பி.டி. ரணதிவே சிறையில் இருந்தார். இன்று இந்த 32 தலைவர்களில் கேரளத்தின் வீர தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் மட்டுமே நம்மிடையே உள்ளார்.
மார்க்சிஸ்ட் பாதையில் தமிழகத் தோழர்கள்:
இந்த 32 தலைவர்களின் துணிகரமான முடிவை ஆதரித்து
52 தமிழக தலைவர்கள் குரல் கொடுத்தனர். அவர்களில் முன்னணித் தோழர்கள்:
ஏ. பாலசுப்பிரமணியன், வி.பி. சிந்தன், கே.பி. ஜானகியம்மாள், என். வரதராஜன், ஏ. அப்துல் வஹாப், கே. முத்தையா, ஆர். ராமராஜ், கே. கஜபதி, கே.எஸ். பார்த்தசாரதி, வி.கே. கோதண்டராமன், சி. கோவிந்தராஜன், எம். பூபதி, எல். அப்பு,
சி.ஏ. பாலன், ஆர். வெங்கிடு, பி.எஸ். தனுஷ்கோடி, ஏ.பி. பழனிச்சாமி, வி. கார்மேகம், வி.ஏ. கருப்பசாமி, எஸ். பாலவிநாயகம், எம்.எம். அலி
இந்த வரலாற்று நிகழ்வு, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. கொள்கைப் பிரச்சனைகளில் சமரசம் செய்து கொள்ளாத இந்த தலைவர்களின் துணிவு, இன்றும் நமக்கு வழிகாட்டுகிறது.
1957 - கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம்
1957-ல் இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்று எழுதப்பட்டது. கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று, இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அமைத்தது. 126 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி 60 இடங்களையும், அதன் ஆதரவாளர்கள் 5 இடங்களையும் கைப்பற்றி, தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் மக்கள் ஆட்சி அமைந்தது. ஏப்ரல் 5, 1957-ல் பதவியேற்ற அந்த வரலாற்று சிறப்புமிக்க அமைச்சரவையில் இடம்பெற்ற தலைவர்கள்: - முதலமைச்சர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் - சி. அச்சுதமேனன், கே.சி. ஜார்ஜ், டி.வி. தாமஸ், கே.பி. கோபாலன், பி.கே. சாத்தன், கே.ஆர். கௌரி, பேராசிரியர் ஜோசப் முண்டசேரி, டி.ஏ. மஜீத், டாக்டர் ஏ.ஆர். மேனன், வி.ஆர். கிருஷ்ணய்யர் (பின்னாளில் உச்சநீதிமன்ற நீதியரசர்) பதவியேற்ற உடனேயே மக்கள் நலத் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்தது கம்யூனிஸ்ட் அரசு.கல்வி அமைச்சர் ஜோசப் முண்டசேரியின் கல்வி மசோதாவையும், நிலவருவாய் அமைச்சர் கே.ஆர். கௌரியின் நிலச்சீர்திருத்த மசோதாவையும் கடுமையாக எதிர்த்தனர் பிற்போக்கு சக்திகள். கத்தோலிக்க திருச்சபை, நிலப்பிரபுக்கள், நாயர் சர்வீஸ் சொசைட்டி, காங்கிரஸ் கட்சி என அனைவரும் ஒன்றிணைந்து ‘விமோசன சமரம்’ என்ற பெயரில் கலவரங்களைத் தூண்டிவிட்டனர். இந்திரா காந்தி நேரடியாக களமிறங்கி மக்களைத் தூண்டிவிட்டார். இறுதியில் நேரு அரசு, “கேரள அரசு மாநிலத்தின் பெரும்பான்மை கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை” என்ற சாக்கில் அரசியலமைப்புச் சட்டம் 356-ஐ பயன்படுத்தி 1959 ஜூலை 31-ல் கேரள அரசை கலைத்தது. 28 மாதங்களே ஆட்சி செய்த அந்த முதல் கம்யூனிஸ்ட் அரசு, தொழிலாளர், விவசாயிகள், ஆசிரியர்கள் என அனைத்து மக்களின் நலனுக்காகவும் போராடிய வரலாறு, இன்றும் கேரள மக்களின் நெஞ்சங்களில் பசுமையாக நிலைத்திருக்கிறது.