tamilnadu

img

ஒரு பிரியாணி பொட்டலம் பிரிக்கப்படாமலே இருக்கிறது - மதுக்கூர் இராமலிங்கம்

தமுஎகச மாநாடுகள், சிறப்பு மாநாடுகள் என்று யோசிக்கும் போதெல்லாம் அழைக்க வேண்டியவர்களின் பட்டியலில் தோழர் சீத்தாராம் யெச்சூரி எப்போதும்  இடம்பெற்றிருப்பார். பல்வேறு மாநாடு களுக்கு வந்து சிறப்பித்த அவர், கருத்துச் செறிவுமிக்க உரைகளை நிகழ்த்தி யிருக்கிறார். குறிப்பாக கோவையில் வன்முறை நடந்து ஓய்ந்த பிறகு நடைபெற்ற மாநாட்டுக்கு தோழர் யெச்சூரி வந்திருந்தார். அந்த மாநாட்டில் அவர் எழில்மிகு ஆங்கிலத்தில் ஆற்றிய உரையை தோழர்கள் இப்போதும் நினைவுகூர்ந்தபடி இருக்கிறார்கள். அவரது உரையை தோழர்  அருணன் ஆற்றல் மிகு தமிழில் மொழி பெயர்த்தார். இரட்டை நாயனம் போல ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி வந்து விழுந்த கருத்துக்கள் குற்றால பேரருவிக் கொட்டியது போல அமைந்திருந்தது.  தோழர் யெச்சூரி ஒரு எழுச்சிமிக்க பேச்சாளர். ஒரு உரையை எங்கே துவங்க வேண்டும். எப்படியெல்லாம் விவரித்து கொண்டுசெல்ல வேண்டும். எங்கே முடிக்க வேண்டும் என்பது குறித்து அவருக்கிருந்த தெளிவு அபாரமானது. அதேபோல தென்சென்னையில் நடந்த தமுஎகச மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும், காமராஜர் அரங்கத்தில் தமுஎகச நடத்திய கருத்துரிமை மாநாட்டில் அவர் ஆற்றிய உரையும் என்றென்றும் நினைவில் அலை அடித்துக் கொண்டே இருக்கிறது. வேதங்கள், புராணங்கள் அனைத்தை யும் கரைத்துக் குடித்திருந்த அவர், பொருத்த மான இடத்தில் அதை மேற்கோள் காட்டுவார்.  இந்துத்துவா சித்தாந்த வாதிகள் முன் வைக்கிற குதர்க்கமும், வன்மமும் நிறைந்த  பிரச்சாரத்தை அவர் செவ்வியல் இலக்கி யத்தைக் கொண்டே முறியடிப்பார். ஒரு ஆற்றல் வாய்ந்த வில்லாளியின் வில்லிலிருந்து சரமாரியாகப் புறப்படுகிற அம்பினைப் போல அவருடைய நாவிலிருந்து புறப்படும் சொற்களின் அணிவகுப்பு எதிரியின் எந்த வியூகத்தையும் முறித்துவிடக் கூடிய ஆற்றல் வாய்ந்தது.

தமிழ்நாட்டில் எந்த ஊருக்குச் சென்றா லும் அந்த ஊரின் பெருமையை இணைத்து சொல்வது தோழர் என்.சங்கரய்யாவின் வழக்கம். அதே பாணியை தோழர் யெச்சூரி யும் பின்பற்றினார். நெல்லையில் நடை பெற்ற கட்சியின் சிறப்பு மாநாட்டிற்கு வந்த போது மகாகவி பாரதி பயின்ற மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளிக்கு தோழர் யெச்சூரி சென்றார். பாரதி பயின்ற போது அவர்  அமர்ந்திருந்த அதே இருக்கையில் தோழர் யெச்சூரி தோழர்கள் புடைசூழ அமர்ந்தார். பாரதியின் பெருமையை பேசினார். இத்தகைய பாங்குதான் தோழர்கள் அவரை மிக நெருக்கமாக உணர்வதற்கு காரணமாக இருந்தது எனலாம். ஆழமான மார்க்சிய கருத்தியல் உரை யானாலும் சரி, சிக்கலான பொருளாதார விசயங்களை முன் வைக்கும் உரையாக இருந்தாலும் சரி தெளிவான நீரோடை போல அமைந்திருக்கும் அவரது உரை. ஆங்கிலத்தில் அவருக்கிருந்த பேரரறிவு வியக்க வைக்கக் கூடிய ஒன்று. ஆனால் அதைக்கொண்டு கேட்பவரை பிரமிக்க வைப்பது அவரது நோக்கமாக இருக்காது. மாறாக, ஆங்கில மொழி குறித்து குறைந்த பட்ச அறிமுகம் உள்ளவருக்குக் கூட புரிய வைத்துவிட வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும்.   செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி அண்மையில் கலை, இலக்கியம் தொடர்பாக வந்திருக்கும் புத்தகங்களைக் கூட அவர் படித்திருப்பார். சிக்கலான இசங்களை முன்  வைத்து பரப்பப்படும் இருளைக் கூட மார்க்சி யம் என்ற வெளிச்சத்தில் அம்பலப்படுத்தும் ஆற்றல் அவருக்கு உண்டு. அவருடைய வாசிப்பு வேகம் அபாரமானது. அவருடைய பயணப் பையில் எப்பொழுதும் புத்தகங்கள் இடம்பெற்றிருக்கும். 

அவருடைய எழுத்தும் அப்படித்தான். பல ஆயிரம் பக்கங்களை அவர் எழுதிக் குவித்திருக்கிறார்.  அவருடைய ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்த்து எழுதுவது மிகவும் சுகமாக இருக்கும். சில கட்டுரைகளை மொழிபெயர்ப்பது என்பது  கலங்களாக வரும் காட்டாற்றை நீந்திக் கடக்க முயல்வது போல இருக்கும். ஆனால் தோழர் யெச்சூரியின் கட்டுரையை மொழி பெயர்ப்பது என்பது அடி நிலமும் தெளி வாகத் தெரியும், பளிங்கு போன்ற நீரோடை யில் இறங்கி மூழ்குவது போல எளிமையாக இருக்கும். அவருடைய கட்டுரைகளை மொழி பெயர்க்கும் போது அகராதியை அடிக்கடி புரட்ட வேண்டிய அவசியம் இருக்காது. சில சொற்கள் புதிதாக இருந்தபோதும் கூட அந்த வாக்கியத்தின் கட்டமைப்பைக் கொண்டே நம்மால் அதை புரிந்து கொண்டு மொழி பெயர்ப்பு செய்துவிட முடியும். அவருடைய குரலும் மிகவும் வசீகர மானது. தோளில் கைபோட்டுக் கொண்டே உரையாடும் நேசப்பூர்வமான மொழிக்குச் சொந்தக்காரர் அவர்.  அண்மையில் நடந்து முடிந்த நாடாளு மன்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு தோழர்  சீத்தாராம் வந்திருந்தார். மதுரை விமான  நிலையத்திலிருந்து தோழர் ஏ.ஆறுமுக நயி னாரும், நானும் அவரை திண்டுக்கல்லுக்கு அழைத்துக் கொண்டு செல்லும் ஒரு பெரும் வாய்ப்பு கிட்டியது. 

ஒரு மணி நேர பயணம் முழுவதும் திண்டுக்கல் தொகுதி நிலவரம் குறித்தும், எதுகுறித்து பேசினால் பொருத்தமாக இருக்கும் என்றும் கேட்டுக் கொண்டே வந்தார். அதை உள்வாங்கிக் கொண்டு அவரு டைய பாணியில் பொதுக்கூட்டத்தில் பேசினார்.  மதிய உணவாக தோழர்கள் அவருக்கு திண்டுக்கல் பிரியாணி வாங்கி வைத்திருந்தார்கள். பொதுவாக நான் பிரியாணி குறைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனால் இது சுவையாக இருந்ததால் முழு மையாக சாப்பிடுகிறேன் என்று கூறினார்.  மாலையில் பொதுக்கூட்டத்தில் பேசும்  போது மதியம் சாப்பிட்ட திண்டுக்கல் பிரி யாணி குறிப்பிட்ட போது, திண்டுக்கல் காரர்கள் அவருடைய உரையில் சட்டென்று ஒட்டிக்கொண்டார்கள். நானும் பிரியாணி ஊர்க்காரர்தான். உங்கள் ஊர் பிரியாணி யைப் போலவே ஹைதராபாத் பிரியாணியும் மிகவும் பிரபலம். இந்தியாவினுடைய பன்முகப் பண்பாடு என்பது பிரியாணியைப் போன்றதுதான். பல்வேறு மணம், நிறம், குணம் கொண்ட மசாலாப் பொருட்களும், அரிசியும், இறைச்சியும் இணைகிற போது தான் சுவையான பிரியாணி கிடைக்கிறது. அதுபோல பல்வேறுபட்ட பண்பாடு இணைந்து தான் நம்முடைய இந்தியத் திருநாடு உருவாகியிருக்கிறது. இதை சிதைத்து ஒற்றையை திணிக்க முயலும் மதவெறி சக்திகளை முறியடிக்க வேண்டும் என்றார் அவர்.  பிரியாணியைப் போல பொதுக்கூட்டத் திடல் தோழர் யெச்சூரியின் வர்ணிப்பால் மணத்தது. மக்கள் மிக நெருக்கமாக அவரது உரையை கேட்டனர். அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு வகையான வாழை வகைகள் இருந்தாலும் உங்கள் மாவட்ட சிறு மலை பழம் மிகவும் ருசியானது. அதையும் ரசித்து சாப்பிட்டேன் என்றார். அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, தோழர் யெச்சூரி அறைக்குச் சென்றவுடன், ஒரு பெரிய சிறுமலை பழ பார்சலையே அனுப்பி வைத்துவிட்டார்.  தோழர் யெச்சூரி தன்னுடைய உரையை முடிக்கும் போது மதுரையிலும், திண்டுக் கல்லிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றிபெறு வார்கள். வெற்றிவிழாவின் போது நான் நிச்சயம் வருவேன். நாம் அனைவரும் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டு மகிழ்வோம் என்றார். கைத்தட்டலால் பொதுக்கூட்டத் திடல் அதிர்ந்தது. ஆனால் தோழர் யெச்சூரி இனி தமிழ்நாட்டிற்கோ,  திண்டுக்கல்லுக்கோ வரும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு பிரியாணி பொட்டலம் பிரிக்கப்படாமலே இருக்கிறது.