tamilnadu

img

எல்லைப் பகுதியில் ரோந்து : இந்தியா - சீனா உடன்பாடு!

புதுதில்லி, அக். 22 - இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே,  லடாக் எல்லைப் பகுதியில் நான்கு ஆண்டு களுக்கும் மேலாக நீடிக்கும் பதற்றத்தை தணிக் கும் நடவடிக்கையில் முக்கிய முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Actual Control - LAC) பகுதியில்  ரோந்து மேற்கொள்வதில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த முக்கிய முன்னேற்றத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்கட் கிழமை அறிவித்தார். டெம்சோக் மற்றும் டெப்சாங் ஆகிய எஞ்சியிருந்த பதற்றமான பகுதிகளுக்கும் இந்த ஒப்பந்தம் பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் (BRICS)  உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா செல்வது தொடர்பான செய்தியாளர் சந்திப் பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில், 2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பதற்றத் திற்குப் பிறகு, கடந்த சில வாரங்களாக இந்திய - சீன இராஜீய அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரதிநிதிகள் பல்வேறு மன்றங்களில் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் குறித்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார். 2020-இல் நிறுத்தப்பட்ட ரோந்து பணிகள் மீண்டும் தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். “2020 இல் இருந்த நிலைக்கு நாம் திரும்பியுள்ளோம். இதன்மூலம் சீனாவுடனான படைகள் பின்வாங்கும் செயல்முறை நிறை வடைந்துள்ளது” என ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்த ‘இடைத்தடுப்பு மண்டலங்கள்’ குறித்த விவரங்களை வெளியுறவு அமைச்சகம் வெளியிடவில்லை. இந்த அறிவிப்பு பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு ஒரு நாள் முன்பு வெளியிடப்பட்டுள்ளதால், மோடி - ஜீ ஜின்பிங் சந்திப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2014 முதல் 2020 வரை 18 முறை சந்தித்த இரு தலைவர்களும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு  2022-இல் இந்தோனேசியாவில் நடந்த ஜி-20  உச்சி மாநாடு மற்றும் 2023-இல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆகியவற்றில் மட்டுமே பொதுவெளியில் பேசியுள்ளனர்.

இந்நிலையில், தற்போது கசான் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல  தரப்பு சந்திப்புகள் நடைபெறும் என்றும், இரு தரப்பு சந்திப்புகள் குறித்த விவரங்கள் விரை வில் அறிவிக்கப்படும் என்றும் வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி தெரிவித்துள்ளார். இருநாடுகள் இடையில் உடன்பாடு ஏற் பட்டுள்ளது என்ற மிஸ்ரியின் அறிவிப்பை,  சீனாவும் செவ்வாய்க்கிழமைஉறுதிப்படுத்தியது. “சமீப காலமாக சீனாவும் இந்தியாவும் இராஜதந்திர மற்றும் இராணுவ வழிமுறைகள் மூலம் நெருக்கமான தொடர்பில் இருந்தன. இப் போது இரு தரப்பும் சம்பந்தப்பட்ட விவகாரங் களில் தீர்வை எட்டியுள்ளன” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். 2020 ஜூன்  மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழ ந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மோசமாகியது. இந்நிலையில், தற்போது எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.