tamilnadu

img

தொழிலாளர் போராட்டத் தடங்களில் வாழ்க்கைப் பயணம் - ஜி.ராமகிருஷ்ணன்

தொழிலாளர் போராட்டத் தடங்களில் வாழ்க்கைப் பயணம் 

சென்னை மாநக ரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முன்ன ணிப் பங்களித்த மூத்த தோழர்களில் ஒருவர் தான் எஸ்.கே.டி. என்று அழைக்கப்படும் தோழர் எஸ். குமார தாசன்.  தொழிற்சங்கம், கட்சி இரண்டிலும் இவரது பணிகள் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டுகள்.

1946ல் சென்னை, சைதாப்பேட்டையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் குமாரதாசன். பெற்றோர்களால் இவரைப் பத்தாம் வகுப்பிற்கு மேல் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. 1966இல் கிண்டி தொழிற்பேட்டையில் பாலியன் ஜெனரல் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொழிலாளியாகச் சேர்ந்தார். தினக்கூலி ரூ.1.50. அதன் தொழி லாளர் சங்கத்திலும் இணைந்தார். நிர்வாகத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழி லாளர்களை மறுபடியும் வேலைக்கு எடுக்கவும்,  நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து தொழிலாளர் களையும் நிரந்தரமாக்கவும் வலியுறுத்தி வேலை நிறுத்தம் தொடங்கியது. சிஐடியு தலைவர்கள் கே.எம்.ஹரிபட், சி.பி.தாமோதரன் வழிநடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனை வரும் நிரந்தரமாக்கப்பட்டனர். சங்க உறுப்பினராக அப்போராட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.கே.டி.  முன்னரங்க ஊழியராகச் செயல்படத் தொடங்கினார். இந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தின் தலைவராக வி.பி.சிந்தன், பொதுச்செயலாளராக டி.நந்தகோபால் இருந்தபோது, நிர்வாகம் ஏற்க மறுத்த முறையான ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து, 1980இல் வேலைநிறுத்தம் தொடங்கியது. அதற்கு ஆதரவாகத் தொழிற்பேட்டைத் தொழிலாளர்களைத் திரட்டிய சிஐடியு தலைவர்களோடு குமாரதாசன் உள்ளிட்டோரும் இரவு பகலாக முகாமிட்டு தொழிலாளர்களுக்குத் துணையாக நின்றார்கள். “80 நாள் போராட்டத்திற்குப் பிறகு  நிர்வாகம் பணிந்தது, ஊதிய உயர்வு கையெழுத்தானது. ஒரு கம்பெனியின் தொழிலாளர்களுக்காக மற்ற கம்பெனிகளின் தொழிலாளர்கள் இயக்கம்  நடத்துவதால் வர்க்க உணர்வு மேம்படுவதை அப்போது அனுபவப்பூர்வமாகப் புரிந்து கொண்டேன்,” என்கிறார் எஸ்.கே.டி. திருப்புமுனைப் பேரணி 1968இல் இவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கொண்டுவந்தார் தோழர் ஹரிபட். அதே ஆண்டு கேரளத்தின் கொச்சி நகரில் கட்சியின் 8ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. மாநாட்டு நிறைவு நாளில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்துகொண்டது ஒரு திருப்புமுனை என்கிறார். “அந்தப் பேரணிக்குப் பிறகு என் வாழ்க்கையில் கட்சிக்காக உழைப்பதே பிரதான மான பணியாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்” என்று  கூறினார். அந்த மாநாடு நடந்து கொண்டிருந்தபோது தான் தமிழகத்தில் கீழ வெண்மணிக் கொடூரத்தை நிலச்சுவான்தார்களும் அடியாட் களும் சேர்ந்து நடத்தினர். 44 தலித்–விவசாயத் தொழிலாளர்களை உயிரோடு கொளுத்தினர். வெறியர் கும்பலைக் கண்டித்தும் உரிய நடவடிக்கை களை வலியுறுத்தியும் சென்னையில் தீப்பந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டதை நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். 1969இல் ஆலந்தூரில் ‘மார்க்ஸ் பொதுநல மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இவரது தலைமையில் நடைபெற்ற மன்றப் பொதுக்கூட்டத்தில் தோழர்கள் என். சங்கரய்யா, பி.ஆர். பரமேஸ்வரன், மைதிலி சிவராமன், கே.எம்.ஹரிபட் ஆகியோர் பங்கேற்றதையும், தன்னு டைய முயற்சியில் அந்தக் கூட்டம் நடந்ததையும் நினைவுகூர்கையில் இப்போதும் முகத்தில் பெருமை படர்கிறது. ஆலந்தூரில் இருந்தபோது தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, தேசாபிமானி ஆகிய கட்சிப் பத்திரிகைகளை விநியோகிக்கத் தொடங்கினார்.

முழுநேர ஊழியர்

இத்தகைய ஈடுபாடுகளைக் கவனித்த கட்சியின் அன்றைய சென்னை மாவட்டச் செயலாளர் பி.ஆர்.பரமேஸ்வரன் முழுநேர ஊழியராக வரும் படி அழைத்திருக்கிறார். பெருமகிழ்ச்சியோடு ஏற்று கொண்ட எஸ்.கே.டி., ஏழாண்டுகளாக வேலை செய்துவந்த நிறுவனத்திலிருந்து விலகினார், 1973இல் கட்சியின்  முழுநேர ஊழியரானார். பல்லாவரத்தில் சென்னை மாநகராட்சியின் கல்குவாரி திட்டம் செயல்பட்டு வந்தது. அதை நடத்திய நிறுவனத்தில் 200 பெண்கள் உட்பட 500 தொழிலாளர்கள் வேலை செய்தனர்.  ஹரிபட்  தலைவராகவும் மைதிலி சிவராமன் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்த அந்தச் சங்கத்தின் செயலாளராகச் செயல்பட்டார் குமாரதாசன். “1975இல் அவசரநிலை ஆட்சியின்போது கல்குவாரி தொழிலாளர்களின் கோரிக்கை களுக்காக வேலைநிறுத்தம் நடந்தது. அதில் பங்கேற்ற தொழிலாளர்களில் 14 பேர் கைது செய்யப்பட்டார்கள், பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் நிலைமையை சாதகமாக்கிக்கொண்ட நிர்வாகம் ஐ.என்.டி.யு.சி.  சங்கத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டது. அவசர நிலை ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, டிஸ்மிஸ்  செய்யப்பட்டவர்களைத் திரும்பவும் வேலைக்கு எடுக்கவும், தொழிலாளர்கள் எல்லோரையும் நிரந்தரமாக்கவும் போராட்டத்தைத் தொடங்கி னோம். அது வெற்றிகரமாக முடிந்தது. தொழி லாளர்கள் எல்லோரும் நிரந்தரமாக்கப்பட்டார்கள்,” என்றார் எஸ்.கே.டி. குவாரித் தொழிலாளர்கள் பெருமளவுக்கு வசித்த பல்லாவரம் பகுதியில் கட்சிக் கிளை உருவாக்கப்பட்டது. அதில் இருந்த பலர் பின்னா ளில் பகுதிக்குழு உறுப்பினர்களானார்கள். கல்குவாரி சங்கப் பொருளாளரின் மகன் ஜீவானந்தம் பகுதிக்குழு செயலாளராகவும், பின்னர் மாவட்டக்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். “பல்லாவரத்தில் பல கிளைகளும், பகுதிக்குழுவும் உருவானதற்குப் பின்புலமாக இருந்தது அங்கே நடந்த தொழிலாளர் போராட் டங்கள்தான்” என்று எஸ்.கே.டி. குறிப்பிடுகிறார். 1981இல் கல்குவாரியை அரசு மூடியது. அதன்  தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சிப் பணி யாளர்களாக ஆக்கப்பட்டார்கள். மாநகராட்சித் தொழிலாளர்களின் செங்கொடி சங்கத்தில் இணைந்தார்கள். அதன் பொறுப்பாளர்களில் ஒருவராக குமாரதாசன்  தேர்வு செய்யப்பட்டார். ஒரு கட்டத்தில் பெருங்குடி தொழிற்பேட்டை பகுதியில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கணிச மாக உருவாகியிருந்த பின்னணியில் அந்தப் பகுதியில் செயல்படத் தொடங்கினார். டி.கே.ராஜன் தலைவராகவும், ராமன் துணைத் தலைவராகவும் இருந்த பெருங்குடி பொதுத் தொழிலாளர் சங்கத் தின் பொதுச்செயலாளராக இவர் செயல்பட்டார்.

குடிசை வாழ் மக்களுக்காக

பெருங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுக்குட்டை (தற்போது சென்னை மாநகராட்சி 184ஆவது வட்டம்) பகுதியில் சுமார் 15,000 பேர் 35 ஆண்டு காலமாகக் குடிசைகளையும் சிறிய வீடுகளையும் கட்டி வசித்து வந்தார்கள். அவர் களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற பேரூ ராட்சி நிர்வாகமும், அன்றைய அதிமுக அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆளுங்கட்சி யினர் சில குடிசைகளுக்குத் தீ வைத்தார்கள். கட்சியின் திருவான்மியூர்-சோழிங்கநல்லூர் இடைக்குழு குடிசைவாழ் மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடங்கியது. அப்போது இடைக்குழு செயலாளராகப் பணியாற்றியவர் டி.ராமன். சிஐடியு அறைகூவலை ஏற்று பெருங்குடி தொழிற்பேட்டைத் தொழிலாளர்கள் கல்லுக்குட்டை மக்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள். மாநில அரசும், பேரூராட்சி நிர்வாகமும் எடுத்த கடுமை யான நடவடிக்கைளால் பின்வாங்காத மக்கள் செங்கொடி அளித்த ஊக்கத்துடன் உறுதியாக நின்ற தால் குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. அப்போராட்டத்தில் மக்களுக்கு உறுதுணை யாக நின்ற எஸ்.கே.டி., “கல்லுக்குட்டையில் இப்போது கட்சிக் கிளையும், வாலிபர் சங்க, மாதர் சங்க முறைசாரா தொழிலாளர் சங்கக் கிளைகளும் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன” என்று தெரிவிக்கிறார்.

சாதிமறுப்பு இணையேற்பு

கிண்டி தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறு வனத்தில் வேலை செய்து வந்தார் வனஜகுமாரி. சங்கப் பொறுப்பாளராக அங்கே எஸ்.கே.டி. சென்ற போது, பணிகளில் ஆர்வம் காட்டிய வனஜ குமாரியைச் சந்தித்தார். அந்நிறுவனத்தில் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது அவரை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. எஸ்.கே.டி. - வனஜ குமாரி இருவரும் நேசம் கொண்டனர். பி.ஆர்.பரமேஸ்வரன் ஆலோசனைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். 1979இல் வி.பி.சிந்தன் தலைமையில் இவர்களின் சாதிமறுப்பு மணவிழா ஊரறிய நடைபெற்றது.  அதில் கலந்து கொள்ளாத வனஜாவின் பெற்றோர் பிறகு சமாதானமாக, குடும்பங்கள் இணைந்தன. முன்னணி இயக்கத் தோழரான வனஜகுமாரி இப்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மகள் பாரதி (ஊடகவியலாளர்), மகன் பாலசுப்பிர மணியம் (திரைத்துறை) இருவரும் கட்சி உறுப் பினர்கள். பாரதி-ஜி.செல்வா (கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்) திருமணமும் சாதிமறுப்புத் திருமணமே. எஸ்.கே.டி. கட்சியின் கிண்டி-தாம்பரம் இடைக்குழு உறுப்பினராக, தென் சென்னை  மாவட்டக்குழு–மாவட்டச் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்திருக்கிறார். 2017இல் மாவட்டக் குழுவிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது வேளச்சேரி பகுதிக்குழுவிற்கு உட்பட்ட கிளையில் உறுப்பினராக இயன்ற பணிகளைச் செய்து வரு கிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலை யிலும் பிடிவாதமாக இப்போதும் ‘தீக்கதிர்’ விநியோகிப்பதைத் தோழர்கள் பெருமையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள். களப்பணிப் பயணத்தைத் தொழிலாளியாகத் தொடங்கியவர். தொழிற்சங்க ஊழியராக, கட்சி உறுப்பினராக, கட்சியின் முழுநேர ஊழியராக என  பங்களித்திருப்பவர். சிஐடியு மாவட்ட நிர்வாகியாக வும், மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட வர். கிண்டி தொழிற்பேட்டை, சோழிங்கநல்லூர் தொழிற்பேட்டை, பல்லாவரம் கல்குவாரி தொழி லாளர் சங்கம், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பு களில் தொழிலாளர்கள் நலன்களுக்காக அர்ப் பணிப்போடு செயல்பட்டவர். தொழிலாளர் களுக்காகப் போராடிப் பலமுறை  சிறை சென்றவர். தற்போது 80 வயதாகும் தோழர் எஸ்.குமாரதாசனின் இயக்கத் தொண்டுக்கு வயது 60. ஒரு முன்னுதாரணமான இந்த இயக்க ஈடுபாடு பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.