டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குருப் 2 மற்றும் 2ஏ அறிவிப்பைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப் - 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9 ஆயிரத்து 457 பேரும் தகுதி பெற்றனர். இதனைத் தொடர்ந்து முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு நேற்று (08-02-2026) நடைபெற இருந்தது.
ஆனால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாமலும், நந்தனம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 9 மணியைக் கடந்தும் வினாத்தாள் வராமலுல் பல குளறுபடிகள் காணப்பட்டது. இதை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில், குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
இது போதுமான நடவடிக்கை அல்ல; ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியிடங்கள், முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படியான TNPSC தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது. இது எந்த விதமான வெளிப்படைத்தன்மையையோ, நம்பிக்கையையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது. TNPSC குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும்.
தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
