மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி எம்.பி-க்கள் முடிவெடுத்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி கடந்த பிப்.4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பதிலளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக் காததுடன், சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் நடத்திய போராட்டம் காரணமாக, பிரதமர் மோடி மக்களவையிலிருந்து வெளியேறினார். எனினும் அவர் பிப்.5-ஆம் தேதி பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை. இது பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பதில் சொல்வதற்குப் பயந்து தான், பிரதமர் மோடி அவைக்கு வருவதைத் தவிர்த்து விட்டார்!” என குற்றம் சாட்டினார். அதற்குப் பதிலளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “பிரதமர் மோடியை அவைக்கு வர வேண்டாம் என்று நான்தான் கூறினேன்” என்று தெரிவித்தார். மேலும், ‘”பிரதமர் பதில் சொல்லும்போது அவரது இருக்கை அருகில் விரும்பத்தகாத செயலில் ஈடுபட காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டிருந்தனர். எதிர்க்கட்சிகளின் செயலை தவிர்க்கவே, நான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். எஸ்.ஜோதி மணி, ஆர்.சுதா உள்ளிட்ட 6 காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் பிரதமரை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சபாநாயகரின் பேச்சுக்கு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், சீன விவகாரம் குறித்து நரவனே-யின் புத்தக வாக்குமூலம் ஆகியவற்றை திசைத்திருப்பவே சபாநாயகர் இவ்வாறு சர்ச்சையைக் கிளப்புவதாக குற்றம் சாட்டினர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகர்ஜூன் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற கட்சி தலைவர்கள்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, எதிர்க்கட்சிகளைப் பேச விடாமல் தடுப்பது, பிரதமரை எதிர்க்கட்சியினர் தாக்க திட்டமிட்டதாக குற்றம்சாட்டியது உள்ளிட்ட செயல்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.
