tamilnadu

img

ஓம் பிர்லாவின் உபதேசம்

ஓம் பிர்லாவின் உபதேசம்

‘விவாதம் ஜனநாயகத்தின் உயிர்நாடி’ என்று தர்மாவுபதேசம் செய்துள்ளார் மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா. பீகார் மாநில சட்டமன்ற நிறுவன தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் அவர் இவ்வாறு பேசியுள்ளதோடு, எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை அவர் தனக்குத் தானே கூறிக் கொள்வது நல்லது. 

சுதந்திர இந்திய வரலாற்றில் எத்தனையோ சபாநாயகர்களை மக்களவை கண்டுள்ளது. பெரும்பாலானவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதர வாகவும் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. விதிவிலக்காக  சில சபாநாயகர்கள் பிரதமர், ஒன்றிய அமைச்சர்களும் விதி களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதும் உண்டு.

ஆனால் மக்களவை வரலாற்றிலேயே தன்னுடைய அவக்கேடான செயல் மூலம் இடம்பெற்றிருப்பவர் ஓம்பிர்லா என்றுதான் சொல்ல வேண்டும். தனக்கும், தன்னுடைய ஆட்சிக்கும் நெருக்கடி வருகிற போது உயிர்க்கு ஆபத்து என்று சொல்லி திசை திருப்புவது பிரதமர் மோடியின் வழக்கம். பிரதமரின் பாது காப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இட மில்லை. ஆனால் மோடியைப் பொருத்தவரை அதை ஒரு மலிவான உத்தியாக  பின்பற்றி வருகிறார்.

அவருக்கு துணைபோகும் விதமாக, “குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை வழங்க வரவேண்டாம் என்று நான்தான் கேட்டுக் கொண்டேன். காரணம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை தாக்க இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்ததுதான்” என்று ஓம்பிர்லா கூறியது அவர் வகிக்கும் பதவிக்கு அழகுசேர்ப்பதாக இல்லை. 

முன்னாள் ராணுவத் தளபதி ஒருவரின் நூலில் வெளியாகியுள்ள தகவல், அமெரிக்கா வின் பாலியல் பயங்கரவாதி எப்ஸ்டீன் கோப்பு களில் வெளியாகியுள்ள அதிர்ச்சி விபரம், இந்தி யாவின் இறையாண்மையையும் சுயசார்பை யும் காவுகொடுக்கும் வகையில் அமெரிக்கா வுடன் செய்துகொண்டுள்ள வர்த்தக உடன் பாடு போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி மக்கள வைக்குத் வர அஞ்சுகிறார். அதற்கான திரைக் கதை வசனத்தை மக்களவை சபாநாயகரே அமைத்துக் கொடுப்பது அவக்கேடனாது. மாநிலங்களவை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி பறிக்கப்பட்ட விதமும் அதன் பின்  அவர் மர்மமாகிவிட்டதும் ஓம்பிர்லாவுக்கு உவப்பானதாக உள்ளதா? காகிதமில்லா அவை குறித்து பெருமிதம் தெரிவிக்கிறார் ஓம்பிர்லா.  ஆனால் ஜனநாயகம் இல்லாத அவையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டுக் கொண்டிருப்பது குறித்து அவர் வெட்கப்பட வேண்டும்.