தெற்குலகிற்குத் தேவை உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு இந்தியப் பொருளாதாரத்தின் கொந்தளிப்பும் தீர்வுகளும்!
2025 ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தன்று ஆற்றிய உரையில், பிரதமர் நரேந்திர மோடி ‘விக்சித் பாரத் 2047’ (வளர்ச்சி யடைந்த இந்தியா 2047) எனும் இலக்கை முன்வைத்து, ‘தேசிய உற்பத்தி இயக்கத்தை’ (National Manufacturing Mission) அறிவித்தார். இறக்குமதிச் சார்பைக் குறைத்து, விண்வெளி ஆய்வு முதல் செயற்கை நுண்ணறிவு வரை அனைத்துத் துறைகளி லும் பொருளாதாரத் தற்சார்பை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றார். இதற்காக 100 முன்னு ரிமைப் பொருட்களை அடையாளம் காணுமாறு மாநி லங்களைக் கேட்டுக்கொண்ட அவர், உலகளாவிய நிறுவனங்களை ஈர்க்க நிலம் மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். உண்மையில், இந்த ‘விக்சித் பாரத் 2047’ என்பது 2014-ல் தொடங்கப்பட்ட ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மறுபதிப்பே ஆகும். இந்த இரண்டு திட்டங்களுமே மூன்று தவறான புரிதல்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன:
• நேரடி அந்நிய முதலீடு மட்டுமே உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும். • வெளிநாட்டுப் பெருநிறுவனங்களின் வழிகாட்டு தலின் கீழ் மட்டுமே இந்திய நிறுவனங்களால் உற்பத்தி செய்ய முடியும். • ஒரு பொருளின் முழுமையான விநியோகச் சங்கி லியை இந்தியாவில் உருவாக்க வேண்டியதில்லை; வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் ‘அசெம்பிளி’ (Assembly) வேலை செய்தாலே அது ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதற்குப் போது மானது. ஆனால், 1991 தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சிதைக்கப் பட்டு, இந்தியா வெறும் ‘சேவை ஏற்றுமதி’ (Services exporter) செய்யும் நாடாக மாற்றப்பட்டுள்ளது. ‘டிரை கோண்டினென்டல் சமூக ஆராய்ச்சி நிறுவனம்’ வெளி யிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, ‘இந்தியப் பொருளா தாரத்தின் கொந்தளிப்பு’ (ஜனவரி 2026), தாராளமய மாக்கல் எப்படி இந்தியத் தொழில்துறையை முடக்கி, வேலையின்மை எனும் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது என்பதை விளக்குகிறது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி ரகசியமும் ஆசியாவின் தடைகளும் மேற்கத்திய நாடுகள் வெறும் கடின உழைப்பால் மட்டும் முன்னேறவில்லை. அவை தொழில்மயமான காலத்தில் இன்று தெற்குலக நாடுகளுக்கு மறுக்கப் படும் பல சாதகமான சூழல்கள் அவர்களுக்கு இருந்தன. காலனித்துவச் சுரண்டல்: ஐரோப்பிய நாடுகள் தங்களது காலனிகளிலிருந்து மலிவான மூலப்பொருட்களையும் உழைப்பையும் சுரண்டின. கைப்பற்றப்பட்ட சந்தைகள்: உள்நாட்டில் சமத்துவமின்மை காரணமாகத் தேவை குறைந்த போது, தங்களது உற்பத்திப் பொருட்களைக் கட்டாய மாக விற்பனை செய்ய காலனிகளைச் சந்தை களாகப் பயன்படுத்தின. பாதுகாப்புவாதம்: தங்களது உள்நாட்டுச் சந்தையை நீண்ட காலத்திற்கு வெளிநாட்டுப் போட்டிகளிலிருந்து பாதுகாத்தன. மறுபுறம், இந்தியா போன்ற தெற்குலக நாடுகள் இன்று உலகளாவிய மூலதனத்தின் பிடியில் சிக்கி யுள்ளன. கொள்கை முடிவுகளை எடுப்பதில் இவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. வர்த்தகத் தாராள மயமாக்கல் எனும் பெயரில் வளர்ந்த நாடுகள் நமது சந்தைகளை ஆக்கிரமித்துள்ளன. இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் தடை யாக இல்லை; மாறாக உள்நாட்டிலும் வெளிநாட்டி லும் நிலவும் ‘கிராக்கி குறைபாடே’ (Lack of demand) பெரும் தடையாக உள்ளது. இந்தியாவில் நிலவும் கடும் வருமான சமத்துவமின்மை, மக்கள் பொருட் களை வாங்கும் சக்தியைக் குறைத்துவிட்டது.
இந்தியாவின் தொழில்துறை நெருக்கடி: ஐந்து முக்கியக் குறிப்புகள் மேற்கண்ட ஆய்வறிக்கை இந்தியாவின் தொழில் துறை சரிவு குறித்து ஐந்து முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது: உற்பத்தித் துறையின் வீழ்ச்சி: 2000-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) உற்பத்தித் துறையின் பங்கு 15-17 சதவீதத்திலேயே தேங்கிக் கிடைக்கிறது. இது கடந்த அறுபது ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவாகும். உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்து, மக்கள் மீண்டும் விவசாயத்தை நோக்கித் தள்ளப்படுவது ‘முதிர்ச்சியற்ற தொழில்துறை சிதைவை’ (Premature deindustrialisation) - அதாவது பெருமளவு வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே தொழில்துறை வீழ்ச்சி அடைந்ததைக் காட்டுகிறது. கொள்கைத் தோல்விகள்: ‘மேக் இன் இந்தியா’, ‘ஆத்மநிர்பர் பாரத்’ போன்ற திட்டங்கள் உயர் தொழில்நுட்பத் தொழில்துறையை உருவாக்கத் தவறிவிட்டன. மாறாக, இறக்குமதி செய்யப்பட்ட பாகங்களை வெறும் ‘ஸ்க்ரூடிரைவர்’ கொண்டு இணைக்கும் அசெம்பிளி வேலைகளையே இவை ஊக்குவிக்கின்றன. நிலச் சீர்திருத்தம் இல்லாமை : இந்தியாவில் முறையான நிலச் சீர்திருத்தம் செய்யப்படாததும், நிலவும் வர்க்க சமத்துவமின்மையும் கிராமப்புற மக்க ளின் வாங்கும் சக்தியை முடக்கியுள்ளன. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உள்நாட்டுச் சந்தையில் போதிய கிராக்கி இல்லாமல் போகிறது. பொதுத்துறை நலிவு : தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் காரணமாக, கனரக இயந்திரங்கள் மற்றும் மின்னணுத் துறையில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பலவீன மடைந்துள்ளன. இது தொழில்நுட்பத் தற்சார்பை அழித்து, இறக்குமதிச் சார்பை அதிகரித்துள்ளது.
சேவைத் துறையின் போதாமை: தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் நிதித் துறையைச் சார்ந்த சேவைத் துறை வளர்ச்சி, உற்பத்தித் துறைக்கு மாற்றா காது. ஏனெனில் இத்துறை மிகக் குறைந்த எண்ணிக் கையிலான ஊழியர்களையே உள்வாங்குகிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் இன்றும் குறைந்த ஊதியம் மற்றும் பாதுகாப்பற்ற முறைசாரா வேலைகளிலேயே சிக்கியுள்ளனர். இந்தியத் தொழில்துறைக்கான மாற்றுத் திட்டம் இந்த நெருக்கடியிலிருந்து மீள மேற்கண்ட ஆய்வறிக்கை சில அடிப்படையான கொள்கைகளை விவாதத்திற்கு முன்வைக்கிறது: அரசியல் மயமாக்கப்பட்ட தொழில்துறைக் கொள்கை: தொழில்துறைக் கொள்கை என்பது வெறும் தொழில்நுட்ப அறிக்கை அல்ல; அது ஒரு அரசியல் திட்டம். இதில் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்க ளின் பங்களிப்பு உறுதி செய்யப்பட வேண்டும். உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்பு: தொழில்துறை யின் வெற்றியை அதன் ஏற்றுமதி அளவை வைத்தோ அல்லது பங்குச் சந்தை மதிப்பை வைத்தோ அள விடக் கூடாது. எத்தனை பேருக்கு நிலையான வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதைக் கொண்டே அளவிட வேண்டும். மறுவிநியோகம்
: தொழில்துறை வளர்ச்சிக்கு வருமான மறுவிநியோகம் மிக அவசியம். கூலியை உயர்த்துதல், ஊரக மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள், பொதுக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரத்தில் முதலீடு செய்வதன் மூலமே மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து உள்நாட்டுத் தேவையை உருவாக்க முடியும். அரசே உற்பத்தியாளர் : அரசு வெறும் ஒழுங்கு முறை அமைப்பாக மட்டும் இருக்கக் கூடாது. மருந்து கள், எரிசக்தி, கனரக இயந்திரங்கள் ஆகிய வற்றைத் தயாரிப்பதில் அரசு நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியை உருவாக்க வேண்டும். இறக்குமதித் தற்காப்பு: இறக்குமதிச் சார்பை ஒழிக்கத் தேவையான வரிகளை (Tariffs) விதிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்முதல் முறையை அரசு பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப இறையாண்மை: உலகளாவிய மதிப்புச் சங்கிலியில் இணைவது என்பது ஒரு இலக்கல்ல; அது நமது நாட்டின் தொழில்நுட்பத் திறனை வளர்ப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட் டிற்கான (R&D) நிதியை அதிகரிக்க வேண்டும். துறைசார் இலக்குகள்: ஜவுளி போன்ற உழைப்பு செறிந்த துறைகள் வேலைவாய்ப்புக்காகவும், மின்னணு மற்றும் மருந்துத் துறைகள் நாட்டின் பாது காப்பு மற்றும் இறையாண்மைக்காகவும் திட்டமிடப்பட வேண்டும். தொழில்துறை ஒரு சில நகரங்களில் மட்டும் குவியாமல் பரவலாக்கப்பட வேண்டும்.
நிதி மேலாதிக்கம் : நிதித் துறை உற்பத்திக்குச் சேவை செய்ய வேண்டுமே தவிர, உற்பத்தியை நிதித் துறை ஆதிக்கம் செய்யக் கூடாது. ஊக வணிகத்தைத் தடுத்து, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்குக் கடன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மனித விடுதலையின் குரல் தொழில்துறையைப் பற்றிப் பேசும்போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்நிலையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் பெரும்பாலும் இந்தக் கொள்கை முடிவுகளில் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனமான அதானிக் குழுமத்தின் விருதை நிராகரித்த தமிழ் கவிஞர் சுகிர்தராணியின் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அதிகா ரத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் சாதியத்திற்கும் எதிராக எழுதும் அவரது ‘இயற்கையின் ஊற்றுக்கண்’ எனும் கவிதையின் சாரம் இதோ: “என்னை உயிரோடு புதைப்பதாகச் சொல்லுங்கள், நான் ஒரு பச்சைப்புல் வெளியாகப் பரவி விரிந்து கிடப்பேன். என்னை எரியூட்டுங்கள்; நான் ஒரு தீப்பறவையாகி வானில் பறப்பேன்.
என்னை ஒரு பாட்டிலுக்குள் அடைக்க முயலுங்கள்; நான் பாதரசமாகி வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்பேன். நீங்கள் என்னை காற்றில் கரைக்கலாம்; நான் எல்லாத் திசைகளிலிருந்தும் மூச்சுக்காற்றாக வெளிப்படுவேன். நீங்கள் என்னைச் சட்டமிட்டுச் சுவரில் தொங்கவிடலாம்; நான் திடீர் வெள்ளமாகப் பாய்ந்து ஓடுவேன். பூமி, நெருப்பு, வானம், காற்று, நீர் என நானே மாறுவேன். நீங்கள் என்னை எவ்வளவு ஒடுக்க நினைக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நான் பொங்கி வழிவேன் - இயற்கையின் ஊற்றுக்கண் நான்.” இந்தக் கவிதை சொல்லும் முழுமையான மனித விடுதலையே நமது அனைத்துப் பொருளாதாரச் சிந்தனைகளின் மையமாக இருக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சி என்பது சிலரின் லாபத்திற் காக அல்ல; அது உழைக்கும் மக்களின் மேன்மைக் காகவும் சுதந்திரத்திற்காகவும் இருக்க வேண்டும்.தோழர் குவாமே நக்ருமா கூறியது போல: “எப்போதும் முன்னோக்கி, எப்போதும் பின்வாங்காதே!” தமிழில் சுருக்கம்: எஸ்.பி.ஆர்.
