tamilnadu

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு  ஒரு லட்சத்தைத் தாண்டியது சென்னைக்கு முதலிடம்

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு  ஒரு லட்சத்தைத் தாண்டியது சென்னைக்கு முதலிடம்

சென்னை, பிப். 8 - இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.  அதன்படி, தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு முதல்முறையாக ஓராண்டில்  ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1 லட்சத்து 97 பேர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் 53,542 பேர், ஆண்க ள் 46,555 பேர். பாதிப்பு கடந்த 2020-இல் 68,750 ஆகவும்,  2021-இல் 76,968 ஆகவும், 2022-இல் 89,265 ஆகவும், 2023-இல்  92,816 ஆகவும், 2024-இல் 96,486 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள் அதிகமாக மார்பக புற்றுநோய், கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள னர். ஆண்கள், வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்து காஞ்சிபுரத்தில் 7,295 பேருக்கும் வேலூரில் 6,525 பேருக்கும் உறுதியாகியுள்ளது. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதலையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழகம், கேரளம் போன்ற வளர்ந்த மாநிலங்களில், மக்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளது. அவ்வாறு  மக்களின் ஆயுட்காலத்தை அதிகமாகக் கொண்டிருக்கும் மாநிலங்களில், வயதானவர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, புற்றுநோய் பாதித்தோரின் வயதையும் கணக்கில் கொண்டே, புற்றுநோய் பாதிப்பை மதிப்பிட வேண்டும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். எனினும், தமிழகத்தில் 14 வயதுடைய பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.