tamilnadu

img

சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி நெய்வேலி சுப்பிரமணியன் காவல் சித்ரவதை மரணம் : கொலை வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சிபிஎம் தொடர் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி  நெய்வேலி சுப்பிரமணியன் காவல் சித்ரவதை மரணம் : கொலை வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச. 10 - விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சுப்பிரமணியன் என்பவர், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் மரணமடைந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் முக்கியமான வெற்றியாகும். கடலூர் மாவட்டம், பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இவர், 2015-ஆம் ஆண்டு சந்தேக வழக்கில் நெய்வேலி நகரிய காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசாரணை என்ற பெயரில் 8 நாட்கள் சித்ரவதை செய்யப்பட்ட சுப்பிரமணியன், உடல் நலிவுற்று உயிர் ஊசலாடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.  பலத்த தாக்குதலுக்கு உள்ளான சுப்பிரமணியன், உடலில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகவே உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில், சுப்பிரமணியனின் மனைவி ரேவதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், வடலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் வி. ராஜா, துணை ஆய்வாளர் செந்தில்வேலன் மற்றும் காவலர் சௌமியன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை, பிரிவு 302 (கொலை) மற்றும் எஸ்சி - எஸ்டி மக்கள் மீதான அட்டூழியங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி கடலூர் நீதிமன்றத்தில் இந்த பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ஆனால் முதல் மற்றும் இரண்டாம் குற்றவாளிகள் தொடுத்த வழக்கில், கொலைப் பிரிவை நீக்க உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 12 அன்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் ரேவதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த மே  10 அன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹரிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வு, பட்டாம்பாக்கம் சுப்பிரமணியன் மரணம் சித்ரவதையால்தான் ஏற்பட்டதா என்பதை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. அதுவரை கடலூர் மாவட்ட நீதிமன்றத் தின் விசாரணைக்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு இந்நிலையில், புதன்கிழமை (டிச. 10) அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கள் எம்.எம். சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பிரிவு 302-இன் கீழான விசாரணைக்கு வழங்கப்பட்ட தடையாணையை நீக்கி, வழக்கில் கொலைப் பிரிவு 302-ஐ சேர்ப்பதே சரியென உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை விரைந்து நடத்தவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, பட்டாம்பாக்கம் சுப்பிரமணியன் காவல் நிலைய மரண வழக்கு, கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சுப்பிரமணியத்தின் மனைவி ரேவதி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுரேஷ், பிர சன்னா, ஆர். திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர். 

களப்போராட்டங்களும்  சட்டப் போராட்டங்களும்

பட்டாம்பாக்கம் சுப்பிரமணியன் கொலை வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் காவல் ஆய்வாளர் ராஜா என்கிற ராஜாராமன் ஆவார். இந்நிலையில், இந்த வழக்கின் சாட்சிகள் பெரும்பாலானோர், ராஜாராமன் பணிபுரியும் வடலூர் காவல் நிலைய எல்லைக்குள் வருபவர்கள். ஒரு சிலர் அவரின் கீழ் பணிபுரியும் காவலர்கள். லாக்கப் கொலை நடந்த காவல்நிலையமும் நெய்வேலி டவுன்ஷிப்புக்கு அருகில் உள்ள காவல் நிலையம் என்பதால் பாதிக்கப்பட்டோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என்ற நிலை இருந்தது. எனவே, ராஜாராமனை இடமாற்றம் செய்வதற்கு டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டுமென சுப்பிரமணியனின் மனைவி ரேவதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியுடன் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை  வழக்கு (எண் W.P No. 2546/2024) தொடர்ந்தார்.  முன்னதாக பலகட்ட போராட்டங்களும் நடைபெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்ற மறியல், அன்றைய மத்தியக் குழு உறுப்பி னர் உ. வாசுகி பங்கேற்ற மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக முற்றுகை  ஆகிய போராட்டங்களுடன், சென்னையில் டிஜிபி-யை நேரில் சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் உள்துறைச் செயலாளருக்கும் 20.6.2024 அன்று மனு அனுப்பப்பட்டது. இதனிடையே, ரேவதியின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி, காவல் ஆய்வாளர் ராஜாராமன் இடமாற்றம் குறித்து நான்கு  வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க டிஜிபிக்கு 4.6.2024 அன்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, வடலூர் காவல் நிலையத்திலிருந்து விழுப்புரம் காவல் சரகத்திற்கு காத்திருப்பு பட்டியலில் ராஜாவை  இடமாற்றம் செய்து  1.7.2024 அன்று டிஐஜி ஆணை  பிறப்பித்தார். வடலூர் காவல்நிலைய காவல் ஆய்வா ளராக நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்றார். இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 302 என்பது கொலைக்கான தண்டனை பற்றியது.  இந்த சட்டத்தின்படி, கொலைக் குற்றம் நிரூபிக்கப் பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.  கடலூர் மாவட்டம் முதனை இராஜாகண்ணு, சிதம்பரம் அண்ணாமலைநகர் பத்மினி கணவர் நந்தகோபால் ஆகியோரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு களில் நீதிக்கான போராட்டத்தை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது பட்டாம்பாக்கம் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் உச்சநீதிமன்றம் வரை  சென்று வெற்றி பெற்றுள்ளது. இது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் களப்போராட்டத் திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி யாகும். கொலையான சுப்பிரமணியனின் மனைவி ரேவதி, தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லிக்குப்பம் பகுதிக்குழு உறுப்பின ராகவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்டப் பொருளாளராகவும் பணியாற்றி வருகிறார்.