இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.43 ஆக வீழ்ச்சியடைந்தி ருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு சொல்கிறது, “நமது ஜிடிபி 8.2 சதவிகிதம் வளர்ந்திருக்கிறது” என்று. இந்த முரண்பாட்டை எப்படிப் புரிந்து கொள்வது?
நம் அன்றாட வாழ்க்கையில் இந்த வளர்ச்சி தெரிகிறதா? ஒரு சிறிய கடைக்காரர், ஒரு சிறு தொழிலதிபர், ஒரு வேலை தேடும் இளைஞர் - இவர்களுக்கு வளர்ச்சி தெரிகிறதா? இல்லை. ஏனென்றால் இந்த எண்கள் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் முறைசாரா துறையின் பங்கு 45-50 சதவிகிதம். சிறு கடைகள், தெரு வோர வியாபாரம், கூலி வேலைகள், வீட்டு உற்பத்தி - இவையெல்லாம் இதில் அடங்கும். இவற்றின் உண்மையான தரவு நம்மிடம் கிடையாது. ஆனால் ஊகத்தின் அடிப்படையில் எண்கள் உருவாக்கப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இந்தியாவின் புள்ளிவிபரத் தரத்திற்கு ‘சி’ மதிப்பீடு கொடுத்திருக்கிறது. இதன் பொருள், நம்மிடம் இருக்கும் தரவுகளே சரியாக இல்லை, நம்பகமானவை அல்ல என்பதுதான். உற்பத்தி முறையில் கணக்கிடும் ஜிடிபியும், செலவு முறையில் கணக்கிடும் ஜிடிபியும் பொருந்த வேண்டும். ஆனால் இதில் 2-3 சதவிகிதம் வரை வேறுபாடு நீடிக்கிறது. இதன் பொருள் தவறான கணக்கீட்டில் போலியான புள்ளிவிபரங்கள் உருவாக்கப்படுகின்றன என்று அர்த்தம்.
அரசின் புள்ளிவிபரங்கள் ஒரு கதை சொல் கின்றன, மக்களின் வாழ்க்கை இன்னொரு கதை யைச் சொல்கிறது. ஜிடிபி-யில் 60 சதவிகிதம் தனிநபர்களின் நுகர்வு. இதன் வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்து வருவதாகப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. காரணம், மக்களிடம் செலவு செய்யப் பணம் இல்லை. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. கடன் சுமை உயர்ந்துள்ளது. பணவீக்கத்திற்கு ஏற்ப உண்மையான ஊதியம் உயரவில்லை. வேலை யின்மை அதிகரித்து வருகிறது. வேலை கிடைத்தாலும் அது தற்காலிக வேலை, சரியான சம்பளம் இல்லை, பாதுகாப்பு இல்லை. இதுதான் இன்றைய இந்தியப் பொருளா தாரத்தின் கொடூரமான உண்மை.
ஒரு அறையில் ஒன்பது ஏழைகளும், ஒரு கோடீஸ்வரனும் இருக்கிறார்கள் என்று வைத் துக்கொள்ளுங்கள். சராசரியாகப் பார்த்தால் அனைவரும் லட்சாதிபதிகள்! ஆனால் உண்மையில் ஒன்பது பேர் ஏழைகள்தானே? இது தான் இன்றைய இந்தியாவின் கதை. பணக்கா ரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள். ஏழை கள் அப்படியே இருக்கிறார்கள். இடைவெளி அதிகரிக்கிறது.
போலி புள்ளிவிபரங்களை அரசியல் ஆயு தமாகப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அது குறுகிய கால அரசியல் லாபத்திற்கு உதவலாம். ஆனால் நீண்ட காலத்தில் நாட்டின் நம்பகத்தன்மையையே குலைத்துவிடும்!
