தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்
சென்னை, டிச. 4 - பீகார் மாநிலத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முடிவில், சுமார் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 4-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த இந்தப் பணிகள், மழை உள்ளிட்ட காரணங்களால் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதன் பின்னர், டிசம்பர் 16 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான், டிசம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 5 கோடியே 16 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறந்தவர்கள் என்ற முறையில் 25 லட்சத்து 72 ஆயிரத்து 871 பெயர்களும், இடம் பெயர்ந்தவர்களாக 39 லட்சத்து 27 ஆயிரத்து 973 பெயர்களும், தொடர்புகொள்ள முடியாதவர்கள் என 8.95 லட்சம் பேரும், இரட்டைப் பதிவுகள் என்ற அடிப்படையில் 3.32 லட்சம் பேரும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சென்னையில் 40 லட்சம் வாக்குகள் உள்ள நிலையில், இங்கு மட்டும் 10.40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.