நாகப்பட்டினம், டிச. 25 - வெண்மணித் தியாகிகளின் 56-ஆவது நினைவு தினம், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழவெண்மணி கிராமத்தில் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த உழைக்கும் வர்க்கத்தினர், தியாகிகளின் நினைவிடத்தில் மலரஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தினர். அரைப்படி நெல் கூலி உயர்வுக்காகவும், உழைக்கும் வர்க்கத்தின் உதிரச் செங்கொடியை கீழே இறக்க மாட்டோம் என்பதற்காகவும் 1968 டிசம்பர் 25 அன்று 44 விவசாயக் கூலித் தொழி லாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டனர். அவர்களின் நினைவு தினம் ஒவ்வோராண்டும் உழைக்கும் வர்க்கத்தினரால் நினைவுகூரப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், வெண்மணித் தியாகி களின் 56-ஆவது ஆண்டு நினைவு தின வீரவணக்க நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெண்மணி கிராமத்தில் நடைபெற்றது.
வானில் உயர்ந்த செங்கொடி
பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து செவ்வணக்கம் செலுத்தினார். எந்த செங்கொடியை இறக்க மாட்டோம் என்று தியாகிகள் உறுதியுடன் நின்று உயிரைக் கொடுத்தார்களோ, அந்த தியாகங்களால் சிவந்த செங்கொடியை ஓங்கி உயர்ந்த கம்பத்தில் ஏற்றி வைத்தார்.
தலைவர்கள் செவ்வணக்கம்
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், கே. பாலபாரதி, ஜி. சுகுமாரன், விதொச அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், மாநிலக்குழு உறுப்பினர்கள் நாகை மாலி எம்எல்ஏ, எம். சின்னதுரை எம்எல்ஏ, ஐ.வி. நாகராஜன், வீ. அமிர்தலிங்கம், தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சப்தர் ஹஷ்மி குழுவின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செய
பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடுவோம்! - கே. பாலகிருஷ்ணன் அறைகூவல்
வெண்மணியின் வீரத் தியாகி களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் புதனன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: உலகையே உலுக்கிய படுகொலை அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற் காகவும், அடிமைகளாக நடத்தப்பட்ட தங்களை உரிமைக்குரல் எழுப்புதற்கு உணர்வூட்டிய செங்கொடியை ஒருபோதும் கீழே இறக்க மாட்டோம் என்று கூறியதற்காக வும் தலித் வகுப்பைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர், பண்ணையார் களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தற்போதைய நாகை மாவட்டம்) கீழ வெண்மணி கிராமத்தில் 1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நடத்தப்பட்ட இந்த படுகொலை உலகையே உலுக்கியது.
உரிமை பெற்றுத் தந்த தியாகம்
இந்தச் சம்பவம் நடந்து 55 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இத்தனையாண்டு களில் பண்ணையடிமைத்தனம் ஒழிக்கப்படு வதற்கும், உழைக்கும் வர்க்கமானது தங்களின் அடிமை விலங்கொடித்து உரிமைகளைப் பெறுவதற்கும் வெண்மணித் தீயில் வெந்த 44 கண்மணிகளின் தியாகமே காரணமாக அமைந்தது. எனவே ஒவ்வோராண்டும் டிசம்பர் 25 அன்று, தமிழகத்தின் பல்வேறு கிராமப்பகுதி களிலிருந்து வெண்மணியில் கூடும் உழைக்கும் மக்களின் உரிமைக்காக உயிர்நீத்த 44 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, வெண்மணித் தியாகிகளின் 56-ஆம் ஆண்டு நினைவு தினம் வெண்மணி கிராமத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. தியாகிகள் நினைவுத் தூணிற்கு மலரஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
பஞ்சமி நிலம் மீட்க போராடுவோம்
இத்தகைய தியாகம் மிக்க போராட்டங்கள் நடைபெற்றும் கூட, கிராமப்புறங்களில் உள்ள விவசாயத் தொழிலாளிகளுக்கு தற்போது வரை உரிய வருமானம் இல்லை. தமிழ்நாட் டில் எத்தனை ஆட்சிகள் மாறினாலும் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைக்காக செங்கொடி இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறது. நிலச் சீர்திருத்தச் சட்டம் கிடப்பிலேயே கிடக்கிறது. பஞ்சமி நிலங் களை மீட்கவும் போராட வேண்டியது உள்ளது. விவ சாயத் தொழிலாளர்களின் இந்த அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன் வர வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உரிமைகளையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
பாஜக செல்வாக்கை சரித்த விவசாயிகள்
அகில இந்திய அளவில் நிலங்கள், கனிம வளம், கடல் வளங்களை கார்ப்பரேட் முதலாளி களுக்கு தாரை வார்த்து வரும் பாஜக அரசை கண்டித்து போராட்டம் நடந்து வருகின்றன. தில்லி, பஞ்சாப்பில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம், மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பெரும்பான்மையைப் பறித்து மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியது. தற்போது, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக, ஏற்கெனவே நீண்ட காலம் இருந்த கல்விமுறையை மாற்றியுள்ளது. 5 மற்றும் 8 வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. கிராமப்புறத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் கல்வி பெறுவதற்காக செய்யப் பட்டிருந்த ஏற்பாடுகளை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஒழித்துக் கட்ட முயல்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
டிச. 27, 28- திருவண்ணாமலையில் அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி!
நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசிய அமித் ஷா இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, பேசியதை நியாயப்படுத்தி வருகிறார். இதனால், நாடாளுமன்றம் முடங்கியதுடன், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமித் ஷா பேசியது, நாடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இதனிடையே, அமித் ஷா பேசியது தவறு என்று அவருக்கு உணர்த்தும் வகையில்- டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்திற்கு வரும் அமித் ஷாவை எதிர்த்து இடதுசாரி அமைப்புகள் சார்பில் திருவண்ணாமலையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.