மேற்கு ஆசியாவில் இருந்து மேலும் 1,200 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
புதுதில்லி, ஏப். 2 - போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறி தாயகம் திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று ஈரானில் இருந்து 845 மாணவர்கள் உள்பட சுமார் 1,200 இந்தியர்கள் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதாக, ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “845 மாணவர்கள் உள்பட 1,200 இந்தியர்கள் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். இதில், 996 பேர் ஆர்மீனியாவுக்கும், 204 பேர் அஜர்பைஜான் நாட்டுக்கும் சென்றனர். அங்கிருந்து அவர்கள் இந்தியா வருவதற்கு வெளியுறவு அமைச்சகம் உதவி செய்துள்ளது” என அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 28 முதல் 6 லட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா வுக்கு வந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
