tamilnadu

img

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி பிப்.5 முதல் மாணவர்கள் போராட்டம்

மதுரை:
ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு  ரத்து செய்ய வலியுறுத்தி பிப்.5-ஆம் தேதி முதல் பிப்.9-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், முற்றுகைப் போராட்டத்தை இந்திய மாணவர் சங்கம் நடத்துகிறது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் இது தொடர்பாக மதுரையில் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும் குழந்தைத் திருமணங் கள் அதிகரிக்கும். குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பர்.  மாணவர்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை உருவாக்கும் மாணவர்கள் மீது உளவியல் ரீதியாக வன்முறையை தமிழக அரசு தொடுத்துள்ளது.

பின்லாந்து உட்பட எந்த வளர்ந்த நாட்டிலும், அல்லது வளரும் நாடுகளில் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. இந்தநிலையில் தமிழகத்தில் மட்டும் பத்து வயது குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது  அறிவியலுக்கும் உளவியலுக்கும் எதிரானது.ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தோல்விஅடைந்ததாக அறிவிக்கப்படும் பத்துவயதுக் குழந்தை மனரீதியாக பாதிக்கப்பட்டு, அவமானப்பட்டு, பள்ளியிலிருந்து விலக்கப்படும். அல்லது தானாகவே விலகிவிடும் சூழல் உருவாகும். குறிப்பாக நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட தலித் மக்கள், பழங்குடியினர், விளிம்பு நிலை மக்களின் குழந்தைகள் இந்த பொதுத் தேர்வுகளின் மூலம் தகுதியற்றவர் என்ற முத்திரை குத்தப்பட்டு பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்படுவர்.தமிழக அரசு மாணவர்கள் நலனுக்கு எதிரான ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு  பொதுதேர்வு நடத்துவதற்கான அரசாணையை  உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி  பிப். 5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முற்றுகையிடப்படும். சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்படும்.பிப்.6-ஆம் தேதி கோயம்புத்தூர் மண்டல தேர்வுகள் இணை இயக்குனர் அலுவலகம், பிப். 7-ஆம் தேதி மதுரை மண்டலதேர்வு இணை இயக்குநர் அலுவலகம் முற்றுகையிடப்படும். பிப். 8-ஆம் தேதி திருநெல்வேலி மண்டல தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். பிப், 8,9 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைத்து  கல்வி அலுவலகங்கள் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.டிஎன்பிசி தேர்வில் முறைகேடு குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கல்வியில் பன்னாட்டு மூலதனமா?
மத்திய  பட்ஜெட்டில் கல்வியில் பன்னாட்டுமூலதனத்தை அனுமதிப்பதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. ஏழை-எளிய மாணவர்களுக்கு, மக்களுக்கு எதிரான மத்திய அரசின் பட்ஜெட்டை இந்திய மாணவர் சங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. இவ்வாறு ஏ.டி.கண்ணன் கூறினார்.செய்தியாளர் சந்திப்பின்போது மாநிலத் துணைத் தலைவர் மா. கண்ணன், எஸ்.வேல் தேவா, பிருந்தா, க.பாலமுருகன்,  கே.ராகுல்ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.