tamilnadu

img

சாமியாரிணி பிரக்யாவுக்கு எதிராக திரளும் 7 ஆயிரம் சாமியார்கள்

போபால்:

மத்தியப்பிரதேச மாநிலம், போபால் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் போட்டியிடும் நிலையில், அவருக்கு சாமியார்கள் மத்தியிலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


பிரக்யா சிங் தாக்கூரை தோற்கடிக்காமல் விடமாட்டோம் என்று அவர்கள் சூளுரைத்துள்ளனர்.மத்தியப்பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதி, பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொகுதி பாஜக வசம்தான் இருக்கிறது. 1989, 1991, 1996, 1998 ஆகிய நான்கு தேர்தல்களில், பாஜக மூத்த தலைவர் சுஷில் சந்திர வர்மா, போபால் தொகுதியில் வெற்றிபெற்றார். 1999 தேர்தலில் உமா பாரதி, 2004, 2009 தேர்தல்களில் கைலாஷ் ஜோஷி, 2014 தேர்தலில் அலோக் சஞ்சார் ஆகியோர் பாஜக சார்பில் வென்றனர்.


இந்நிலையில்தான், 2019 தேர்தலில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூரை, போபாலில் பாஜக நிறுத்தியுள்ளது. காங்கிரசும், அதற்குப் போட்டியாக, கட்சியின் மூத்தத் தலைவரான திக்விஜய் சிங்கை, போபால் வேட்பாளராக களமிறக்கி விட்டுள்ளது. இருவருமே சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


“மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின்போது மகாராஷ்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே என்னை துன்புறுத்தினார்; அவரை நான் சபித்தேன்; எனது சாபத்தின் காரணமாக பயங்கரவாதிகளால் கார்கரே சுட்டுக் கொல்லப் பட்டார்” என்று பிரக்யா சிங் பிரச்சாரத்தில் கூறியது, அவருக்கே எதிராக திரும்பியது. இந்த பேச்சால் பாஜக-வினரே, பிரக்யா மீது அதிருப்தி அடைந்தனர்.


இந்த சர்ச்சை ஓய்வதற்கு உள்ளேயே, “சிறையில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது கோமியத்தைக் குடித்து குணமானேன்” என்று பிரக்யா கூறியதும், “பிரக்யாவுக்கு புற்றுநோயே இருந்ததில்லை” என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியதும், மேலும் மேலும் பிரக்யா சிங்கிற்கு சிக்கலாக மாறியது.வழக்கமாக, சர்ச்சை பேச்சுகள் என்றாலே திக்விஜய் சிங் மட்டும்தான் நினைவுக்கு வருவார். ஆனால், இந்த தேர்தலில் ஆரம்பம் முதலே அவர் அமைதி காத்து வருகிறார். அவருக்கும் சேர்த்து பிரக்யா சிங் உளறித் தள்ளி, மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.


இந்நிலையில்தான், பெண் சாமியாரான பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக, ஒரு பெரும் சாமியார் கூட்டமே கிளம்பியிருக்கிறது. ‘கம்ப்யூட்டர் பாபா’ என்று அழைக்கப்படும் நாம்தேவ் தியாகி தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள இந்த சாமியார்கள், பிரக்யா சிங் தாக்கூரையும், பாஜக-வையும் தோற்கடித்தே தீருவது என்று சபதம் செய்துள்ளனர். திக்விஜய் சிங் வெற்றிக்காக சிறப்பு யாகமெல்லாம் நடத்தி, பாஜக பாணியிலேயே, அக்கட்சியினரை கதற வைத்துள்ளனர்.“போபால் தொகுதியில் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே யுத்தம் நடைபெறுகிறது. திக்விஜய் சிங் தர்மத்தைக் கடைப்பிடிக்கிறார்.


அவருக்காக 3 நாட்கள் யாகம் நடத்துகிறேன். காவி அணிந்திருப்பதால் பிரக்யா சிங் துறவியாகிவிட முடியாது. மத்தியில் கடந்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி, ராமர் கோயிலை கட்டவில்லை. மதத்தின் பெயரால் பாஜக மக்களை ஏமாற்றும் வேலையைத்தான் செய்து வருகிறது” என்று கம்ப்யூட்டர் பாபா, பாஜகவை விமர்சித்துள்ளார்.நர்மதாவின் நிஜமான பக்தர் திக்விஜய் சிங் தான் என்றும் அழுத்தமாக கூறியிருக்கும் கம்ப்யூட்டர் பாபா, “நானும் சரி, பிற சாமியார்களும் சரி, நர்மதாவுக்கு பூஜை செய்வோமே தவிர, சிறை யாத்திரை நடத்துவது கிடையாது” என்றும் பிரக்யா சிங்கை சாடியுள்ளார். 


“பிரக்யா சிங், ஒரு சாமியார் என்று அழைக்கத் தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர். வீர மரணம் அடைந்த ஹேமந்த் கார்கரே குறித்து, மோசமான கருத்து தெரிவித்தவர்” என்றும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.


கம்ப்யூட்டர் பாபாவுக்கு, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, கடந்த ஆட்சியில் அமைச்சர் அந்தஸ்து வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வியாழக்கிழமையன்று (மே 9) ‘கம்ப்யூட்டர் பாபா’ தலைமையில் சுமார் 7 ஆயிரம் சாமியார்கள் பாஜக-வுக்கு எதிராக ஊர்வலம் செல்கின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் மே 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் முறையே ஆறாம் மற்றும் ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. போபால் தொகுதியில் மொத்தம் 21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் சுமார் 4.5 லட்சம் பேர் முஸ்லிம்கள். 1.5 லட்சம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள்.