லண்டன்
உலகம் முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைத் தனது உள்ளங்கையால் ஆட்டி வரும் கொரோனா வைரஸ் வளமிக்க ஐரோப்பியக் கண்டத்தில் கடும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தில் அதிக பாதிப்பை சந்தித்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனவை ஓரளவு கட்டுப்படுத்திவிட்ட நிலையில், பிரிட்டன் மட்டும் திணறி வருகிறது. அங்கு இதுவரை 47,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4900 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் (வயது 55) கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த மாத இறுதியில் கொரோனா அறிகுறி இருந்ததால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 10 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா அறிகுறி தென்பட்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இளவரசர் சார்லஸ் வைரஸ் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.