காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்
அரசியல் ரீதியாகவும் இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து மிகக்கடுமையான எதிர்ப்பினை -சூழ்ச்சியை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், கம்யூனிஸ்ட்டுகளின் பணியானது, மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் அனைத்து அரசியல் அம்சங்களிலும் பொருத்தி செயல்படுவதாக இருந்தது; எனவே இதை ஒடுக்கும் நோக்கத்துடன் இந்திய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ வர்க்கம் செயல்பட்டது. எந்தவொரு காலனி ஆதிக்க, அரைக் காலனி ஆதிக்க அல்லது மற்றொரு நாட்டை சார்ந்திருக்கிற அல்லது மற்றொரு நாட்டிடம் அடிமையாக இருக்கிற நாட்டின் நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை குணாம்சம் என்பது - மார்க்சிய - லெனினிய கோட்பாடுகளுடன் செயல்படுகிறவர்களை கடுமையாக ஒடுக்கும் விதமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இத்தகைய சூழலில், இந்த ஒடுக்குமுறைகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் தத்துவார்த்த - அரசியல் ரீதியான சிரமங்கள் எழுவது இயல்பு; நாட்டில் இயங்கி வந்த பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் அடிக்கடி சந்தித்து அவர்களுக்குள் தொடர்ச்சியான விவாதத்தை நடத்தினால் மட்டுமே சிரமங்களையும், தவறுகளையும் விரைவாக சரிசெய்துகொள்ள முடியும் என்ற நிலைமையும் இருந்தது. அத்தகைய விவாதம் தொடர்ந்து நடந்தது; பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட திட்டமிட்ட சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் இப்படித்தான் அன்றைய கம்யூனிஸ்ட் குழுக்களின் தலைமை எதிர்கொண்டது.
பல்வேறு கடினமான சூழல்களை எதிர்கொண்ட போதிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிய குழுக்களாக, ஒருங்கிணையாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுபவையாக கம்யூனிஸ்ட் குழுக்கள் இருந்த போதிலும், அவை, ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கமாக முன்னேறுவதை தடுக்க முடியவில்லை; காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களிடையே முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்கள் மத்தியில் புரட்சிகர சோசலிசம் என்ற முழக்கமும் அதன் இலக்குகளும் பிரபலமடைவதை தடுக்க முடியவில்லை; இந்தப் பணியை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்ற சூழல் இருந்த போதிலும், இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளை கூர்மைப்படுத்தவும் முடிந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே ஒரு அறிக்கை சுற்றுக்குவிடப்பட்டது; பல்வேறு அறிவிப்புகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரிலேயே பிரதிநிதிகளிடையே வழங்கப்பட்டன. இந்தச் செயல்பாடு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மெல்ல மெல்ல எழுந்து வருகிறது என்ற செய்தியை - அதன் புரட்சிகர திட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்ற செய்தியை காங்கிரசார் மத்தியில் வலுவாக விதைத்தது. காங்கிரசுக்குள் செயல்பட்ட சிறிய எண்ணிக்கையிலான கம்யூனிஸ்ட்டுகள், தங்களை காங்கிரசுக்குள் இருந்த முற்போக்காளர்களுடன் பிணைத்துக் கொண்டனர்; அதன் மூலம், முழுமையான விடுதலை (பூரண சுயராஜ்யம்) என்ற கருத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும், அதை வெகுமக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்லவும் உந்தித் தள்ளும் மகத்தான பணியினை கம்யூனிஸ்ட்டுகள் செய்தனர்.
அனைத்திற்கும் மேலாக, இந்தியாவில் ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்கத்தை உருவாக்கி வளர்த்து கொண்டுசெல்வதில் மற்ற எல்லோரையும்விட கம்யூனிஸ்ட்டுகளே மிகவும் செயலூக்கமிக்கவர்களாக இருந்தார்கள். வெகுமக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலும் அவர்கள் முன்னின்றார்கள்; அதன் மூலமாக மார்க்சிய - லெனினிய தத்துவத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில் உறுதிமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். சிறிய அளவில் இருந்தாலும், இந்த நடவடிக்கைகள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது; ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற ஒரு பகுதி காங்கிரஸ் தலைவர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது; எனினும் அணிதிரட்டப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் ஏற்படுத்திய அந்தத் தாக்கம், காங்கிரஸ் பின்னால் இருந்த வெகுஜனங்களிடையே ஏற்படவில்லை. உண்மையில், அவர்கள், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பலியாகிக் கிடந்தார்கள். இதற்கு மிக முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட தருணத்தில்தான், காங்கிரசின் தலைமைக்குள் இடது, வலது என்ற பிரிவுகளுக்கிடையே மிகக்கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது; இந்த மோதல் காங்கிரசின் லாகூர் மாநாட்டில் எதிரொலித்தது; இதன் உச்சக்கட்டமாக, அந்த மாநாட்டில் காங்கிரசின் இலக்கு முழுமையான விடுதலையே என்ற தீர்மானத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு தன்னை ஒரு சோசலிஸ்ட் என்று பிரகடனம் செய்து கொண்டார். அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து முதன்மையான மற்றும் அடுத்தக்கட்ட தலைவர்களும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க வாதிகளும் மீரட் சதி வழக்கு விசாரணைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தார்கள்.
நாடு தழுவிய அளவில் கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த சதி வழக்கும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகளும் 1929-33 என முழுமையாக நான்காண்டு காலம் அடிமுதல் நுனி வரை கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன கட்டமைப்பையே கடுமையாக பாதித்தது. அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையம் என ஒன்று செயல்பட முடியவில்லை. எனவே இந்த காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கமானது காங்கிரசுடன் முற்றாக எந்தத் தொடர்பிலும் இல்லை என்றும் எனவே அது தேசிய விடுதலை இயக்கத்தில் எந்தவொரு செல்வாக்கும் செலுத்தவில்லை என்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் பிரச்சாரம் செய்யப்படுவது முற்றிலும் அநியாயமானதாகும். புதிதாக பின்னர் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் சில தலைவர்களும் கூட இப்படி பேசினார்கள். அது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 1936ஆம் ஆண்டு மீரட்டில் நடந்த காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூட, கம்யூனிஸ்ட்டுகள் தேசியவிடுதலை இயக்கத்தில் பங்களிப்பு செய்யவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதை நாம் அப்போதே முற்றாக நிராகரித்து விட்டோம்.
- தொடரும்...