ராமச்சந்திர குஹா தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரை மிகவும் மேம்போக்காக உள்ளது. இடதுசாரிகளுக்கு வாக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை ஏற்றுக்கொள்கிறோம். உரிய முறையில் பரிசீலிப்போம். வாக்கு அரசியல் மட்டுமே எங்கள் இலக்கு அல்ல.
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த போதுதான், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு இடதுசாரிகளுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டனர். தொழிற்சாலைகள் இல்லை! கம்யூனிஸ்ட்டுகளால் வளர்ச்சியே இல்லை என்றார்கள். தொழிற்சாலை வந்தபோது விவசாய நிலத்தை பறித்துவிட்டதாக பொருமினார்கள்.அடையாள, சாதி, மத பிரிவினை அரசியலைக் கட்டமைக்க கார்ப்பரேட்டுகளும், முதலாளித்துவ கட்சிகளும் பல கோடிகளை அள்ளிக்கொட்டுகின்றனர். யார்வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம், தப்பித்தவறி கம்யூனிஸ்ட்டுகள் வந்துவிடக்கூடாது என்பதில் அனைத்து முரண்பாடுகளையும் தூரவைத்து கைகோர்ப்பவர்கள் முதலாளிகள்.
அடிப்படை மக்களின் வாழ்வாதாரம், நாட்டு வளம், விவசாயம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அனுதினமும் போராடும் கம்யூனிஸ்ட்டுகளிடம் கட்டுரையின் ஆசிரியர் ‘இந்தியமயமாகுங்கள்’ என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. மொழி உரிமை, கலாச்சாரம், நாகரீகம் குறித்து சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்ற வரலாறு ராமச்சந்திர குஹாக்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை.ஊடகங்கள் மூலமாக தாங்கள் விரும்பும் கருத்தாக்கத்தை சந்தைப்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை தங்களின் நலனுக்காக வளைத்து ஆதாயம் பெறுவது, பணபலத்தைக் கொண்டு அனைத்தையும் விலைக்கு வாங்குவது என இடதுசாரிகளுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளிலும் முதலாளித்துவம் வலதுசாரிகளோடு கைகோர்த்து வாக்கு அரசியலில் ஆழமான தாக்கத்தை செலுத்துகிறது.
இடதுசாரிகளுக்கு எதிர்காலம் உண்டு! எப்படி?
நாட்டின் கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகின்றன. மதம், சாதி பீடங்கள் வலுவடைகின்றன. கருத்து முதன்மையாக்கப்பட்டு மீண்டும் மூடவிதைகள் தூவப்படுகின்றன. உழைப்புச் சுரண்டல், ஆண்டான் அடிமை, பெண்களை சிறுமைப்படுத்துவது உள்ளிட்ட வேலைகள் உச்சத்தை எட்டிவருகின்றன. மக்கள் வலிக்கும்போது வளைந்து கொடுக்கமாட்டார்கள். நிச்சயம் வரலாறு திரும்பும். அப்பொழுது மக்களை காக்கும் பொருட்டு, வலியால் எழும் சத்தத்தை முழக்கமாக்கும் தருணத்திற்காகவே கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆம்! 20-ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரலாறு கம்யூனிஸ்ட்டுகளின் வரலாறே. இதைத்தான் “அடக்குமுறை சர்வாதிகாரம்” என கட்டுரையில் குறிப்பிடுகிறார் குஹா. ஹிட்லரை வீழ்த்தியதை, ஜார் மன்னர்களை ஓடவிட்டதை வரலாறு மறக்காது. 8 மணி நேரம் வேலை, ஓய்வு, உறக்கம் என்ற உரிமைப் போராட்டம் பாட்டாளிகளின் ரத்தத்தால் உருவானது. இதை பாசிஸ்ட்டுகள் கூட மறுக்க முடியாது.
பூமி மொத்தமும் பொதுவுடமை. எல்லாம் எல்லோருக்கும்; ஏற்றத் தாழ்வே இல்லை என முழக்கங்களை விண்ணுயர எழுப்பி மக்களை எழுச்சி பெறச்செய்து, கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்குவார்கள். பூமியில் செம்பூக்கள் பூத்துக் குலுங்கும் கம்யூனிஸ்டுகளுக்கு கடந்த காலம் மட்டும் அல்ல. எதிர்காலமும் உண்டு.
எஸ்.கவிவர்மன்
சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்
புதுக்கோட்டை