எல்லா காலத்திலும் இடதுசாரிகள் ஊடகங்களால் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளனர், அதிலும் சமீப காலங்களில் மிக அதிகமாக, குறிப்பாக மேற்கு வங்கத்தில். தற்போது பெரும்பாலான ஊடக நிறுவனங்கள், பத்திரிகை இலட்சியங்களால் நடத்தப்படுவதை விட கார்ப்பரேட் நலன்களால் வழிநடத்தப்படுவதால், அவை வாசகர்களை நுகர்வோராகவும், அதன் காரணமாக எந்த செய்தியை விற்பது என்று தீர்மானிப்பவையாகவும் மாற்றிவிட்டன. ஆகவே தற்போதைய சூழல், மிகவும் மோசமாக மாறி, மக்கள் நலனுக்கு மேலே கார்ப்பரேட் நலன் முன்னுரிமை பெற்றுள்ளது. இடதுசாரிகள் எப்போதுமே கார்ப்பரேட் நலனின் எதிர் துருவத்தில் இருப்பதால் அவர்கள் எப்போதும் ஊடகங்களின் கோபத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தளவுக்கு தற்போது ஊடகங்கள் கார்ப்பரேட்மயமாகியுள்ளன என்றால், இந்தியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் குழுமங்களான அம்பானி குழுமம் போன்றவை,ஊடகத்தை தங்கள் கட்டுக்குள் எடுத்துள்ளன; அதில் அச்சு ஊடகமும் காட்சி ஊடகமும் அடங்கும். அனைத்து இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில ஊடகம் வரை அனைத்தும் அடங்கும். இந்த குழுமம் நேரிடையாக சிலஊடகங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. பிறவற்றில், கார்ப்பரேட் விளம்பரம் மறைமுகமாக செய்திகளைவெளியிடுவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
“கேரட் கட்டிய கம்பு” அணுகுமுறை (விளம்பரங்களை அளித்து அவற்றின் மூலம் ஊடகங்களை விலைக்குவாங்குவது) கார்ப்பரேட் குழுமங்களோடு நின்றுவிடவில்லை, மாறாக, அரசாங்கங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் ஊடகங்களின் மிகப்பெரிய விளம்பர வருவாய் கிடைப்பது அரசாங்கங்களிடமிருந்து தான். மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், பாஜக, கார்ப்பரேட்களுக்கு விருப்பமான கட்சி; தொலைக்காட்சி செய்தி என்று எடுத்துக் கொண்டால், அனைத்து கட்சிகளையும் பாஜக ஊதி தள்ளிவிடும்! உதாரணமாக – டிவி 9 என்ற தென்னிந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும் பிரபலமாக உள்ள செய்திச் சேனல், சட்டசபைத் தேர்தலுக்கு முன் தனது சேவைகளை மேற்கு வங்கத்தில் தொடங்கியது. அதன் பிறகு மேற்கு வங்கத்தின் முன்னணி செய்தி சேனல்-ஏபிபி அனந்தா, தொடர்ச்சியாக வங்கத் தேர்தலை இருமுனைப்போட்டியாக, திரிணாமுல் கட்சிக்கும் பாஜகவுக்குமிடையேயான போட்டியாக மட்டும் முன்னிறுத்தி விடுகிறது.
எனவேதான் கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் 10 லட்சம் பேர் கூடிய இடது முன்னணி - ஐக்கிய முன்னணியின் பிரம்மாண்டப் பேரணிஎப்படி சில மணித்துளிகளில் செய்திகளிலிருந்து அகற்றப்பட்டதோ, அதே சமயம் பாஜக வின் சிறு சிறு கூட்டங்கள்கூட மிகப்பெரிய பரபரப்புடன் தொடர்ந்து காண்பிக்கப்படுவதற்கும் ஆச்சர்யப்படத் தேவையில்லை. மற்றொரு செய்தி சேனல், அதில் மக்கள் ஆதரவில் தொலைவான இடத்தில் இருந்தாலும், இந்த சேனல் முன்பு இடது ஆதரவு கொண்ட ஒரு கூட்டமைப்பால் தொடங்கப்பட்டாலும், இதை ஜீ சேனல் கபளீகரம் செய்துவிட்டது. இந்த சேனலும், சந்தையில் சட்டசபை தேர்தல் பற்றிய செய்தி வருணனைகளின் போது ‘இருமுனைப் போட்டிதான்’ என்றே தருகிறது.
இந்த போக்கு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகம்மது சலீம் டுவீட் செய்தார். அதில் மிகவும் முன்னணியில் உள்ளஆங்கில நாளிதழ் தி டெலிகிராப், இதுவும் ஏபிபி குழுமத்தை சேர்ந்ததே, நான்கு வருடங்களில் முதன் முறையாகமார்க்சிஸ்ட் கட்சியின் நிகழ்வுக்கு முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது – அது திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பர்துவானில் ஒரு கூட்டத்தில் பேசியது குறித்த செய்தி.
இவற்றைத் தவிர சுமார் 10-12 செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் வங்க மாநிலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன, அவைகள் பெரும்பாலும், ஆளும் திரிணாமுல் கட்சியின் ஊதுகுழலாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவற்றில் திரிணாமுல் கட்சி தலைவர்கள் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளனர். அசாமிலிருந்து சில பாஜக தலைவர்கள் சில சேனல்களில் அதிக முதலீடு செய்துள்ளனர்.
சுவாரசியமான விஷயம் என்னவெனில் தற்போது சமூக ஊடகத்துறையில், குறிப்பாக டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் சில தேர்தலுக்கு முன்பே வந்துவிட்டன, அவற்றில் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகளால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சமூக ஊடகத்தில் இடதுசாரிகளும் தாக்கம் செலுத்துகின்றனர். இடதுசாரிகள் தாக்கம் பாஜகவைவிட அதிகமாக இருப்பதாக ஊடக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் செய்தித்தாள் வாசிப்பு, அது நகரப்பகுதியாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், அது மேல்தட்டு மக்களின் பழக்கமாகவே இருந்தது. இடது முன்னணி ஆட்சியின் போது, வாசிப்பு இயக்கம் பரந்துபட்டு கொண்டு செல்லப்பட்ட போது, வங்கத்தில் செய்தித்தாள் வாசிப்பு இயக்கம் பரந்துபட்டு விரிவடைந்தது. செய்தி சேனல்கள் வந்த பிறகு, தொலைக்காட்சி பார்ப்பவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது.
ஆனால் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சியால் ஊடக வாசகப் பரப்பு விரிவடைந்தபோதிலும் செய்தித்தாள்கள் உள்ளிட்ட ஊடகங்கள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக எந்தவொரு சிறு சம்பவத்தையும் இடதுசாரிகளுக்கு எதிராக திருப்பிவிடும் வேலையையே அவை செய்தன. இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் சம்பவங்கள் மட்டுமல்ல; அதற்கு முன்பும் இடது முன்னணிக்கு எதிராகத்தான் ஊடகங்கள் செயல்பட்டன. ஆனால்எத்தகைய அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொண்டபோதிலும் மக்கள் மனதிலிருந்து இடதுசாரிகளை அகற்ற முடியவில்லை.
வங்கத்தில் மட்டுமல்ல, ஊடகங்களின் அரசியல் சதியாலோசனை திட்டத்தின் ஒரு பகுதியாக இடது முன்னணிஅரசுகளை தாக்கிய பல சம்பவங்கள் கேரளாவிலும், திரிபுராவிலும் உண்டு. உதாரணமாக 1957ஆம் ஆண்டு இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் முதன் முதலாக ஒரு கம்யூனிஸ்ட் அரசு கேரளாவில் பதவியேற்றது. இந்த அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதிகளின் விளைவாக 1959ல் கவிழ்க்கப்பட்டது. 1988ல் அதே போன்றதொரு நிகழ்வு திரிபுராவில் நடைபெற்றது, அங்கு சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை தொழில்முறை கிரிமினல்களால் ஒரு தேர்தல் கைப்பற்றப்பட்டது.
என்னதான் கார்ப்பரேட் கைகளில் இருந்தாலும் தற்காலத்திய உலகில் ஊடகம் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் ஊடகம் என்றால், அதன் அர்த்தம், செய்தித்தாள், ரேடியோ,தொலைக்காட்சி போன்றவைகள். ஆனால், தற்போது ஏராளமான புதிய ஊடகங்கள் வந்துள்ளன. உதாரணமாக, செல்பேசி, கம்ப்யூட்டர்கள், லேப்டாப் என்பனவற்றில் தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அதன் பிறகு கூடுதல் வசதிகளாக வாட்ஸ்அப் போன்றவை வந்துவிட்டன. ஆகவே ஊடக உலகிலும் இடதுசாரிகளுக்கு எதிர்காலம் என்பது முன்பு இருந்ததைப் போல் இருண்டதாக இருக்கப் போவதில்லை, ஆகவேஇடதுசாரிகள் சமூக ஊடகங்களை தங்கள் பிரச்சாரத்திற்கும் தங்கள் சொல்ல விரும்புவதை மக்களிடத்தில் கொண்டு செல்லவும் மிகவும் பலமாகப் பயன்படுத்துகிறார்கள். வங்கத் தேர்தல் களத்தில் அதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.செய்தித்தாள்களும் டி.வி. செய்திச் சேனல்களும் வங்கத்து இடது முன்னணியை முன்னிறுத்தமறுத்தாலும் அவர்கள் கைகளில் இருக்கிற டிஜிட்டல் ஊடகம் கம்யூனிஸ்ட்டுகளின் கைகளிலும் இருக்கத்தானே செய்கிறது!
கட்டுரையாளர் : சந்தீப் சக்கரவர்த்தி
தமிழில் : தூத்துக்குடி ஆனந்தன்