திருவனந்தபுரம்:
காந்தி கனவு கண்ட இந்தியாவிலிருந்து அதற்கு நேர் எதிரான- விபரீதமான ஒரு இந்தியாவாக நாட்டை மாற்ற சங்பரிவார் முயன்று கொண்டிருக்கிறது. மதச்சார்பின்மைக்கு எதிரான அனைத்து நகர்வுகளையும் மக்கள் தடுத்து தோற்கடிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். தியாகிகள் தினத்தையொட்டி திருவனந்தபுரம் பாளையம் ரத்தசாட்சி மண்டபத்தில் மலரஞ்சலி செலுத்திய பின் பினராயி விஜயன் கூறியதாவது:\
காந்தியின் நன்மதிப்புகளை உயர்த்திப்பிடிக்கும் உண்மையான தேசபக்தர்கள் சங்பரிவாரின் முயற்சிகளை முறியடிக்க முன்வர வேண்டும். காந்தியின் தியாகத்தை இழிவுபடுத்துவதற்கும் உண்மைகளை சிதைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதை அனுமதிக்கக் கூடாது. தேசிய இயக்கத்தின் பிரதான நீரோட்டமான அகிம்சை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்துக் கொண்டு விடுதலை என்கிற லட்சியத்தை எட்டியதை உலக நாடுகள் எப்போதும் ஆச்சரியத்துடன் நினைவு கூருகின்றன. உலகமெங்கும் நீதிக்கும், சமத்துவத்துக்குமான ஜனநாயக போராட்ட முனைகளில் காந்தி இடம்பெறுவது, அவர் உயர்த்திப்பிடித்த மதிப்பீடுகளின் சக்தியை காட்டுவதாகும். நம் நாட்டின் தற்போதைய நெருக்கடியில் காந்தியை கேலி செய்யும் முயற்சி மட்டுமல்ல, அவர் எதிர்த்துவந்த கருத்துகளை அவரது பெயரைக்கூறி நியாயப்படுத்து வதற்கான முயற்சி அரங்கேறுகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பின்னணியில் காந்தியை தவறாக சித்தரிப்பது வரலாறை மறுப்பது மட்டுமல்ல காந்தியின் மீதான குற்றச்செயலாகும். காந்தியின் ரத்தம் தோய்ந்த இந்த மண்ணில் மதபிரிவினைவாதிகளுக்கு இடமில்லை. மதச்சார்பின்மைக்கு எதிரான அனைத்து நகர்வுகளையும் மக்கள் தடுத்து தோற்கடிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என முதல்வர் கூறினார்.