திருவனந்தபுரம்:
கோயில்களின் நிதியை கேரள அரசு எடுத்துகொள்வதாகக் கூறும் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தவறான பிரச்சாரத்துக்கு பதிலளித்த முதல்வர் பினராயி விஜயன் கேரள அரசு, கோவில்களுக்கு நிதியை கொடுக்கிறதா எடுக்கிறதா என்பதை பட்ஜெட் ஒதுக்கீடுகளை பார்த்து மக்கள் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு குருவாயூர் தேவசம் நிர்வாக குழு நிதி அளிப்பதற்கு எதிராக பாஜகவும் காங்கிரசும் போராட்டம்நடத்துவதுடன் வகுப்புவாத பிரச்சாரத்தையும் அவிழ்த்து விட்டுள்ளன. இதற்கு பதிலளித்து சனியன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மேலும் அவர் கூறியதாவது: கேரள அரசின் பட்ஜெட்டை பார்த்தாலேகோயிலுக்கு அரசு நிதி கொடுக்கிறதா எடுக்கிறதா என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் எனவும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.100 கோடியும் மலபார், கொச்சி தேவசம் போர்டுகளுக்கு ரூ.36 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சபரிமலையுடன் சம்மந்தப்பட்ட நிலைக்கல், பம்பை ஆகிய இடங்களில் கிப்பி மூலம் ரூ.142 கோடிக்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சபரிமலை புனித பயணத்துக்கு ரூ.30 கோடி சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. கூத்தாட்டுக்குளம் மகாதேவர் கோயில் உள்ளிட்ட தகர்ந்து வரும் பாரம்பரிய கோயில்களின் புனரமைப்புக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொசுக்களைக் கவரும் ரத்தம்
தத்துவமஸி என்கிற பெயரில் புனித சுற்றுலாவடிவமைக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் பாரம்பரியம் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மக்கள் முன்பு உள்ள கணக்குகள். பட்ஜெட்டை ஆய்வு செய்தால் கோயில்களுக்கு அரசு நிதி கொடுக்கிறதா எடுக்கிறதா என்பது புரிந்துவிடும். பேரிடர் நேரத்தில் மதவெறுப்பை வளர்க்க சிலர் முயற்சிப்பது கெடுதலாகும். கொசுக்களைக் கவரும் ரத்தம் என்பதுபோல சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள் எனவும் முதல்வர் கூறினார். நமது நாட்டின் முக்கியமான கோயில்கள் அந்தந்த மாநில அரசுகளின் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குகின்றன. குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில், அம்பாஜிகோயில், மகாராஷ்டிரத்தில் மகாலட்சுமி தேவசம், ஷீரடி சாய்பாபா டிரஸ்ட், மாதா மன்சிதேவி கோயில், பீகார் மகாவீர் கோயில் போன்றவை ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளன என்பதை முதல்வர் சுட்டிக்காட்டினார்.
இருவருக்கு கொரோனா
கேரளத்தில் சனியன்று மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் கொச்சியிலும் மற்றொருவர் கோழிக்கோட்டிலும் வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்தவர்கள் என முதல்வர் தெரிவித்தார். நோய் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ஒருவர் குணமடைந்தார். வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையான கவனத்துடன் தொடர வேண்டும். உலகின் எந்த மூலையில் கேரளியர் சிக்கியிருந்தாலும் அவர்களை அழைத்து வர அரசு கடமைப்பட்டுள்ளது. அவர்களை திரும்பி அழைத்து வர மத்திய அரசுடன் இடைவிடாமல் கேரளம் தொடர்பு கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோரில் முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது போன்றவற்றை முடிவு செய்வதும் பயண ஏற்பாடுகள், அதற்கான செலவுகளை நிர்வகிப்ப தும் மத்திய அரசுதான். கேரளத்தில் அவர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்வது மாநில அரசு. அதற்காக மாவட்ட அளவில் ஒவ்வொருபொறுப்பு (நோடல்) அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார்.
ரூ.13.45 கோடி அனுமதி
வெளிநாடுகளில் இருந்து விமான நிலையம்வந்தவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகு கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் சிறப்புமுகாம்களுக்கு அழைத்து செல்லப்படு கிறார்கள். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவஉதவிக்கு ஒரு மருத்துவர் உள்ளார். இந்த முகாம்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பில் செயல்படுகின்றன. மேற்பார்வை க்காக சுகாதார ஆய்வாளர்களும் நியமிக்க
ப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஏப்ரல் ஒன்று முதல் ரூ.13.45 அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளத்திலோ இந்தியாவிலோ நோய் கட்டுப்படுவதால் நாம் பாதுகாப்பாகிவிட முடியாது. கொரோனாபாதிப்பு ஏற்பட்ட எந்தவொருநாடும் முழுமையாக மீண்டுவரவில்லை. தினமும் புதிதாக நோய் தொற்று அறிவிக்கப் படுகிறது. உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 38,20,000. சுமார் 2,64,000 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மரணம் (சனிக்கிழமை காலை வரை) 1981. தமிழ்நாட்டில் நோயாளிகள் 6,000க்கு மேல். மரணம் 40. கர்நாடகத்தில் 783 நோயாளிகள். 33 மரணம். அதிகஅளவில் மலையாளிகள் உள்ள மாநிலமான மகாராஷ்டிரத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் நாம் கொரோனாவை எதிர்த்து நிற்கிறோம். எனவேதான் திரும்பி வரும் கேரளியரின் உடல்நலனைபாதுகாக்கவும், நோய் தொற்றை தடுக்கவும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம்.
இ-ஜாக்ரதா செயலி
அரசு பராமரிப்பு மையத்திலும் வீட்டிலும் கண்காணிப்பில் உள்ளவர்களிடம் சுகாதாரத்துறையினர் தொடர்பில் இருப்பார்கள். ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 24 மணி நேரமும் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிறப்பு மருத்துவமனைகளின் பொறுப்பில் ஒவ்வொரு பராமரிப்பு மையமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘கோவிட்- 19 ஜாக்ரதா கேர்’ செயலியும் உருவாக்கப் பட்டுள்ளது. நோய் அறிகுறி இருந்தால் காணொலி அழைப்பு மூலம் மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். சிறிய அளவிலான அறிகுறிகள் இருந்தால் டெலி மெடிசன் மூலம் மருத்துவ குறிப்பு வழங்கி மருந்து கிடைக்கச் செய்வர்.