திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை யினரிடம் பிடிபட்ட தங்க கடத்தல் வழக்கில் முறையான விசாரணை நடத்த பிரதமர் அவசரமாக தலையிட வேண்டும் என அவருக்கு கேரள முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: அரசுமுறையிலான பெட்டகத்தில் மறைத்து பெரிய அளவில் தங்கம் கள்ளக்கடத்தலுக்கு முயன்றது மிகவும் தீவிரமானது. இதுகுறித்து சுங்கத்துறையின் புலனாய்வு நடப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. பல்வேறு பரிமாணங்களிலான விசாரணை இந்த வழக்கில் தேவை.
சம்மந்தப்பட்ட அனைத்து மத்திய விசாரணை முகமைகளும் ஒருங்கிணைந்து அவசரமாக விசாரிக்க வேண்டும். கள்ளக்கடத்தலின் பிறப்பிடம் முதல், கொண்டு செல்லப்படும் இடம் வரை எதுவென வெளிப்படுத்துவதும் அனைத்து விசயங்களும் விசாரணையில் பரிசீலனை செய்யப்பட வேண்டும். மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு நடக்காத வகையில் இந்த குற்றம் குறித்த அனைத்து தொடர்புகளையும் வெளிக்கொணர வேண்டும். விசாரணை முகமைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஆதரவும் மாநில அரசு அளிக்கும் என முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு அனுப்பிய கடிதத்திலும் இதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.