tamilnadu

img

எந்த விமானத்துக்கும் ‘நோ’ சொல்லவில்லை

திருவனந்தபுரம்:
‘வந்தே பாரத்’தின்படி விமானங்கள் வருவதற்கு கேரள அரசு எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை. எந்த விமானத்தையும் வரவேண்டாம் என கூறவும் இல்லை. மத்திய வெளியுறவு அமைச்சரகம் கேட்டுக்கொண்ட அனைத்து விமானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பினராயி விஜயன் கூறினார். 

அனைவருக்கும் வரவேற்பு
வெளிநாடுகளில் இருந்து கேரளியர்களை அழைத்துவரும் விமானங்களுக்கு கேரள அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என மத்தியவெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் கோவிட் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஜூன் 2 ஆம் தேதி வரை 140 விமானங்களில் 24333 பேர், கப்பல் மூலம் 1488 பேர் என மொத்தம் 25821 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்தோ, வெளிமாநிலங்களில் இருந்தோ கேரளத்திற்கு திரும்பி வர விரும்பும் அனைத்து சகோதரர்களையும் அழைத்து வரவும், சுகாதார பாதுகாப்பு அளிக்கவும் அரசு முயன்று வருகிறது. தின மும் ஆட்கள் வருகிறார்கள். அவர்களை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ பரிசோதனை, கண்காணிப்பு, பரிசோதனையில் நோய் உறுதிசெய்யப்பட்டோருக்கு சிகிச்சை, வீடுகளில்தனிமையில் இருப்பவர்களை கண்காணிப்பது போன்றவை முறையாக செய்யப்படுகின்றன. வெளியில் இருந்து மக்கள் வரத்தொடங்கியதும் நோய் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை உயர்ந்தது. தொடர்புகள் மூலம் நோய் பரவுதலை கட்டுக்குள் வைக்க முடிந்துள்ளது. மே 7 முதல்வந்தே பாரத் நிகழ்வு மூலம் பிறநாடுகளில் வசிப்போர் வந்தனர். வந்தே பாரத் மூலம்அவர்கள் வருவதற்கு எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கவில்லை. எந்த ஒரு விமானமும் வரவேண்டாம் என்று கூறவும் இல்லை. மத்தியவெளியுற அமைச்சரகம் தெரிவித்த அனைத்து விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. வந்தே பாரத்தின் இரண்டாம் கட்டத்தில் ஒரே நாளில் 12 விமானங்கள் வருவதாக அமைச்சரகம் கூறியதையும் கேரள அரசு ஏற்றுக்கொண்டது. 

அட்டவணை செய்யப்படாத 324 விமானங்கள்
ஜுனில் 360 விமானங்கள் வர வேண்டும். ஜுன் 3 முதல் 10 வரை 36 விமானங்கள் அட்டவணை செய்யப்பட்டுள்ளன. ஜுன் மாதத்திற்கு கேரளம் ஒப்புதல்அளித்த 324 விமானங்கள் இன்னமும் அட்டவணை செய்யப்பட வேண்டும். மத்திய அரசு விரும்பியபடி அவர்களால் விமானத்தை இயக்க முடியவில்லை. அதை குறை கூற முடியாது. மிகப்பெரிய பணி காரணமாக, ஒரே நேரத்தில் ஏராளமான விமானங்களை அனுப்பி அங்குள்ள வர்களை அழைத்து வருவதில் சிரமம் உள்ளது. கேரளம் ஒப்புதல் அளித்ததில் மீதமுள்ள 324 விமானங்கள் அட்டவணை  செய்யப்பட்டால் மேலும் கூடுதல் விமானங்கள் வர ஒப்புதல் அளிக்கப்படும்.   வந்தே பாரத் மிஷனில் இனி எத்தனை விமானங்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியும் என வெளியுறவு அமைச்சரகம் கேட்டது. விவரம் தெரிவித்தால் ஒப்புதல் அளிக்கப்படும். பட்டியலிடப்பட்ட 40 விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட 26 விமானங்கள் இன்னமும் அட்டவணை செய்யப்பட வேண்டும். அது முழுமை அடைந்தால் மேலும் பட்டியலிடப்படும் விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். எந்தஒரு விமானத்துக்கும் கேரள அரசு ‘நோ’கூறவில்லை என முதல்வர் தெளிவுபடுத்தினார். 

கட்டண அதிகரிப்பு கூடாது 
வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை திரும்ப கொண்டு வருவதில் தொழில் அதிபர்களோ, அமைப்புகளோ விமானம் அனுப்புவதை கேரள அரசு எதிர்க்கவில்லை. பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலித்து அட்டவணை செய்யப்படும் விமானத்தில் அழைத்து வரப்படுவோரிடம் பெறும் பயணக் கட்டணம் வந்தே பாரத் விமானத்துக்கு இணையாக இருக்க வேண்டும் எனவும், இருக்கைகள் வழங்கும்போது முன்னுரிமை பிரிவினரை பரிசீலிக்க வேண்டும் எனவும்கேட்டுக்கொள்ளப்பட்டது. வேறு எந்த நிபந்தனைகளும் இல்லை. இந்த இரண்டு நிபந்தனைகளும் வெளிநாடுகளில் வசிப்போரின் விருப்பத்தின் அடிப்படையிலானவை. தனியார் விமான நிறுவனங்கள் வெளிநாடுகளில் வசிப்போரை திரும்பி அழைத்துவர அனுமதி கேட்டன. அதற்கும் அனுமதி அளிக்கப்படும். ஸ்பைஸ் ஜெட்டின் 300 விமானங்கள் கேரளம் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 10 என்கிற கணக்கில் ஒரு மாதத்தில் இந்த விமானங்கள் வந்து சேரும். கோவிட் பரிசோதனை நடத்தி நோய் தொற்று இல்லாதவர்களை அழைத்து வருவதே ஸ்பைஸ் ஜெட்டுக்கான நிபந்தனை. அபுதாபியில் உள்ள ஒரு அமைப்பு அட்டவணையிடப்பட்ட 40 விமானங்களுக்கு அனுமதி கோரியது. அந்த அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். 

82 பேருக்கு கோவிட்
கேரளத்தில் புதனன்று 82 பேருக்கு கோவிட் நோய் தொற்று உறுதியானது. இதில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 19 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். 5 பேர் சுகாதார ஊழியர்கள். தொடர்பு மூலம் 5 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 24 பேர் குணமடைந்தனர். புதனன்று 4004 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. கேரளத்தில் இதுவரை 1494 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. இதில் 832 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர். 1,60,304 பேர் இப்போது கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1440 பேர் மருத்துவமனைகளிலும், 1,58,861 பேர் வீடுகளிலும் உள்ளனர். புதனன்று 241 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை ஆய்வுக்கு அனுப்பிய 73,712 மாதிரிகளில் 69,606 நோய் தொற்று இல்லை என உறுதியானது. முன்னுரிமை பிரிவினரில் சேகரிக்கப்பட்ட 16,711 மாதிரிகளில் 15,264இல் நோய் இல்லை என ஆய்வு முடிவு வந்துள்ளது. ஹாட் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை 128 எனவும் முதல்வர் கூறினார்.