கொடியேரி உறுதி
திருவனந்தபுரம், ஏப்.23-கேரளத்தில் இடதுஜனநாயக முன்னணி (எல்டிஎப்) பதினெட்டு இடங்களில் வென்ற 2004 மக்கள் தீர்ப்பின் தனி ஆவர்த்தனம் இம்முறையும் நடக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. பாறசாலை முதல் மஞ்சேஸ்வரம் வரை காற்று இடதுசாரிகள் பக்கம் வீசுகிறது எனத் தெரிவித்துள்ள கொடியேரி பாலகிருஷ்ணன், தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கம் முதல் இறுதிவரை எல்டிஎப் முன்னிலை வகித்ததும், அமைப்பு ரீதியான பலமும் இடது ஜனநாயக முன்னணிக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.17வது மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின்போது, செவ்வாயன்று (ஏப். 23) கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.தனது வாக்கினைப் பதிவுசெய்த பின்னர், முகநூல் பதிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:கடந்த தேர்தலின்போது யுடிஎப் உடனும் பாஜக உடனும் இருந்த பல கட்சிகள், குழுக்கள், அமைப்புகள் இப்போது இடதுசாரிகளோடு இணைந்துள்ளன. எல்டிஎப் அடித்தளம் மேலும் வலுவடைந்தது. எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லாமல் முழுமையான ஐக்கியத்தோடு எல்டிஎப் செயல்பட்டது. அதன் பலன் தேர்தல் முடிவில் பிரதிபலிக்கும். முன்பு நடந்த பல தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலை மக்களே ஏற்றுக்கொண்டு நடத்திய அனுபவமே ஏற்பட்டது. பாறசாலை முதல் மஞ்சேஸ்வரம் வரையிலான பகுதிகளுக்குச் சென்றபோது ஒன்று மட்டும் உறுதியாக தெரியவந்தது. காற்று இடதுசாரிகளுக்கு சாதகமாக உள்ளது. பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் எதிராக பலமான எதிர்ப்பு மக்கள் மத்தியில் உள்ளதையும் பார்க்க முடிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகள் மக்களை ஏமாற்றிய நரேந்திர மோடி அரசு, நாட்டை நாசகரமாக வழிநடத்தியது. வகுப்புவாத அடிப்படையிலான பிரிவினைகளை ஏற்படுத்தி ஆதாயம் பெறவே முயன்றது. இது எல்டிஎப்-க்கு பெரிய வெற்றியை தேடித்தரும்.மாநில அரசுக்கு எதிரான உணர்வு எங்கேயும் இல்லை என்பதே குறிப்பிட வேண்டிய செய்தி. சாதாரண நிலையில் தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருக்கும் அரசுக்கு எதிர்ப்பு எழுவது இயல்பானது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக எந்த ஒரு பகுதியிலிருந்தும் அத்தகைய எதிர்ப்பு எழவில்லை என்பது எல்டிஎப்-க்கான மக்கள் ஆதரவின் வெளிப்பாடாகும்.இவ்வாறு கொடியேரி தெரிவித்துள்ளார்.