ஏப்ரல் 28 ஆம் தேதியன்று நடைபெற்றஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்பெரும்பாலான மக்கள் இடதுசாரிக் கொள்கைகள் அமலாவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள சோசலிஸ்டு கட்சி 123 இடங்களையும், மற்றொரு இடதுசாரிக் கட்சியான போடெமாஸ் 42 இடங்களையும் வென்றுள்ளன. மொத்தம் 350 இடங்கள் என்பதால் பெரும்பான்மை பெறுவதற்கு இன்னும் 11 இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.வலதுசாரிக் கட்சியான மக்கள் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. வெறும்66 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. அதன் வரலாற்றில் மோசமான தேர்தல் இதுதான் என்றுகட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 137 இடங்களை வலதுசாரிக் கட்சி பெற்றிருந்தது. தீவிர வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் மற்றொரு கட்சியான குடிமக்கள் கட்சிக்கு 57 இடங்கள் கிடைத்துள்ளன. ஆனால்,தனிநாடு கோரும் கடலோனியா ஆதரவாளர்களுடன் கடந்தமுறை சேர்ந்து ஆட்சியமைத்ததால், இப்போது சோசலிஸ்டுகளை ஆதரிக்கமாட்டோம் என்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.
கட்சிகளைத்தாண்டி எத்தகைய கொள்கைகள் அரசின் நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதில் ஸ்பெயின் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இடதுசாரிக் கொள்கைகள்தான் ஸ்பெயினின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான துவக்கமாக இருக்கும் என்ற பிரச்சாரம்அவர்களிடம் எடுபட்டிருக்கிறது. இத்தகைய மனநிலைதான் ஐரோப்பியக் கண்டம் முழுவதுமாகஇருந்து வருகிறது. எங்கெல்லாம் ஓரளவு நம்பிக்கையளிக்கும் கட்சிகள் இருக்கின்றனவோ, அங்கு எல்லாம் மக்களும் நம்பி வாக்களிக்கிறார்கள்.இத்தகைய போக்குதான் ஸ்பெயினிலும் பிரதிபலித்துள்ளது. மக்களின் எண்ணங்களுக்கு மாறாக செயல்பட்டு விடுவார்கள் என்று சோசலிஸ்டு கட்சி மீது சில இடதுசாரி சிந்தனையாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும், மக்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இடதுபக்கம்தான் தாங்கள் நிற்பதாகவும், அக்கொள்கைகளையே ஆட்சியில் அமர்பவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெளிவாகத் தங்கள் வாக்குகள் மூலமாக செய்தி அனுப்பியுள்ளனர். மக்களின் தீர்ப்பைப் பெற்றிருப்பவர்கள் அதற்கு செவி மடுக்க வேண்டும். கவலையான போக்கு ஒன்றும் உள்ளது. ஸ்பெயின் மக்கள் இதுவரையில் அதிதீவிர வலதுசாரிகளின் பிரச்சாரத்திற்கு இடம் கொடுத்ததில்லை. ஆனால் இம்முறை, வலதுசாரிகளின் வாக்கு சரிவு, அதிதீவிர வலதுசாரிகளுக்கு பலன் அளித்துள்ளது. பத்து சதவிகித வாக்குகளை அவர்கள் வென்றுள்ளனர். ஆனால் இடதுசாரிக்கட்சிகளுக்கு கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளனர். கடந்த முறை இடதுசாரிக் கட்சிகளுக்கு 30 சதவிகிதம் வரையில்தான் வாக்குகள் கிடைத்திருந்தன. கடலோனியாவின் இடதுசாரிக்கூட்டணியும் 15 இடங்களை வென்றுள்ளது. தனிநாடு கோரிக்கையைத் தாண்டி இருதரப்புக்கும் இடையில் சுமுகமான பேச்சுவார்த்தை நடக்க இதுஉதவும். இடதுசாரிகளின் கூட்டணி மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடந்துகொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால், இந்த இடது திருப்பம் ஐரோப்பியக் கண்டம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடும் என்பதில்சந்தேகமில்லை.