திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் அரசின் அனுமதி பெறாமல் கல்குவாரி நடத்த ஆர்எஸ்எஸ் தலைவர் ரூ.3 கோடி பெற்றதையும், தனக்கு எதிராக ஆர்எஸ்எஸ்காரர்களே செய்த கொலை முயற்சி மற்றும் சதிகளையும் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவரான சாந்து செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர். சி.ஜி.தங்கச்சன் என்கிற ஜார்ஜ். இவர் செண்டயாட்டெ என்கிற இடத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் திருட்டுத்தனமாக கல்குவாரி நடத்தி வந்தார். ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரான பி.கே.சாந்து அந்த இடத்திற்கான வாடகை கேட்டுள்ளார். தங்கச்சன் வாடகை தர முன்வராத நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் உதவியை சாந்து நாடியுள்ளார். குவாரியை தொடர்ந்து நடத்தவும் இடத்துக்கான வாடகையாகவும் தனக்கு ரூ. 1.5 கோடி வழங்க ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சமரசம் பேசி (கட்டப்பஞ்சாயத்து) முடிவு செய்தனர். ஆனால் தனக்கு ரூ.4 கோடி தர வேண்டும் என சாந்து கேட்டுள்ளார். தங்கச்சனிடம் ரூ.3 கோடி வாங்கிய ஆர்எஸ்எஸ் தலைவர் பாற சசி என்பவர் அந்த தொகை முழுவதையும் அபகரித்துக்கொண்டதாக சனியன்று செய்தியாளர்களிடம் சாந்து தெரிவித்தார். இதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் சுரேஷ்பாபு மிரட்டியதாகவும் அப்போது அவர் கூறினார்.
சமரசம் பேசுவதாககூறி ஆர்எஸ்எஸ் தலைவர் களான வழக்கறிஞர் கே.கே.பலராம், ஆரளம் சஜீவன், பாஜக மாவட்ட செயலாளர் வி.பி.சுரேந்திரன் ஆகியோரும் தனக்கு எதிரான இந்த வஞ்சக செயலுக்கு துணைபோனதாக சாந்து செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறுகையில், தினமும் 150 லாரிகளில் கல் கொண்டு சென்றனர். நாளொன்றுக்கு ரூ.35 லட்சம் மதிப்பிலான கல் இங்கிருந்து கிடைக்கிறது. இதற்காக தினமும் ஒரு லசட்ம் ரூபாய் பாற சசி பெற்றுக்கொள்கிறார். குவாரிக்கு அருகே நடந்த வாசுவின் மர்ம மரணம் மற்றும் சதி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் என்னை குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தனர். குவாரியில் வைத்து லாரி ஏற்றி கொல்லவும் முயன்றனர். தங்கச்சனை கொலை செய்யவும் தலைவர்கள் என்னிடம் கூறினார்கள்.
பணத்துக்காக சொந்த அமைப்பில் உள்ளவர்களைக்கூட வஞ்சிப்பவர்கள் இப்போதுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள். இவர்களை திருத்தவோ நடவடிக்கை எடுக்கவோ அஞ்சுவது இவர்கள் பங்கு வாங்கிக்கொள்வதால்தான். இவர்களில் பலரும் கிரஷர்கள், பெட்ரோல் பங்க், பேக்கரிகள், வணிக வளாகங்களில் பங்குதாரர்களாக உள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ்- பாஜக தலைமை கனம் மாபியாக்களின் பங்காளிகளும் பாதுகாவலர்களுமாக உள்ளனர் என சாந்து கூறினார்.
சாந்துவின் மருமகன்களான கே.நாராயணன், கே.பிரதீபன், பாஜக ஊழியரான களத்தில் குஞ்ஞி கிருஷ்ணன், கே.டி.ஹரீந்திரன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.