திருவனந்தபுரம்:
உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில அரசு நடத்தி வரும் அடக்கு முறையிலிருந்து மீண்டுவருவார்கள் எனவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு சிபிஎம் மற்றும் இடதுசாரி கட்சிகள் தலைமை வகித்து வருவதாகவும் ஹரிராமன் யாதவ் கூறினார்.
திருவனந்தபுரம் இஎம்எஸ் அகாடமியில் நடந்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ள உ.பி மாநில செயலாளர் ஹரிராமன் யாதவ் மேலும் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன் நிலையில் உள்ள சிபிஎம் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். லக்னோவில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டக் குழு அலுவலகங்கள் காவல்துறையினர் அத்துமீறி மூடியுள்ளனர். ஆனால், ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் அணிவகுத்து வருகிறார்கள்.போராட்டம் அறிவிக்கப்பட்ட நாட்களில் உ.பியின் நகரங்கள் எங்கும் செங்கொடியேந்திய ஆர்ப்பாட்டங்கள் முன்பு எப்போதும் இல்லாத காட்சியாகும். பொதுமக்களும், குறிப்பாக சிறுபான்மை மக்களும் செங்கொடியின் கீழ் அணிதிரள்வது உச்சகட்ட ஆவேசகரமான நிகழ்வுகளாகும். 35 மாவட்டங்களில் டிசம்பர் 19 ஆம் தேதி இடதுசாரி கட்சிகளின் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. லக்னோவில் மட்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். சிபிஎம் மாவட்டக் குழு அலுவலகத்திலிருந்து வெளியேவர தலைவர்களை அனுமதிக்கவில்லை. அதற்கு எதிராகமக்கள் தெருக்களில் இறங்கி போராடினார்கள்.
பத்தாயிரக்கணக்கான மக்களை அன்று கைது செய்தார்கள். பேரணி நடத்தியதற்காக ஏராளமானோர் மீதுகுற்ற வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.வாரணாசியில் சிபிஎம், சிபிஐ, மாவட்டச் செயலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட நீதிபதியிடம் முறையிட்ட பின்னரே அவர்களைபார்க்க முடிந்தது. காங்கிரசும், சமாஜ்வாதி கட்சிகள் எல்லாம் போராட்டத்தில் உள்ள போதிலும்அடக்குமுறைகளுக்கு இரையாக்கப்படுவது இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும், ஊழியர்களும்தான். மோடியின் தொகுதியான வாரணாசியில் இடதுசாரி ஜனநாயக கட்சிகளின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.போராடுவோர் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குதொடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யா நாத் அறிவித்துள்ளார். போராட்டம் வலுப்பெறும் நிலையில் மக்களை சமுதாய ரீதியாக மோதவிடும் முயற்சி நடந்தபோதிலும், அது தோல்வி அடைந்தது. மக்கள் சாதி மத வித்தியாசம் இல்லாமல் அணிவகுப்பதால் ஆட்சிஅதிகாரத்தை பயன்படுத்தி வகுப்புவாதத்தை தூண்டும் முயற்சி நடைபெறுகிறது. முஸ்லிம்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள் எனவும், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரசும் இடதுசாரிகட்சிகளும் தேசவிரோத செயலில் ஈடுபடுவதாகவும் வலுவான பிரச்சாரத்தை செய்யப்படுகிறது என அவர் கூறினார்.