tamilnadu

img

சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் மூணாறு

இடுக்கி:

கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் மனங்கவர்ந்த மூணாறு மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தங்குவதற்கான அறைகள் கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.


ரிசார்ட்டுகளிலும், ஹோம் ஸ்டே, காட்டேஜ் போன்றவற்றில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அறைகள் கிடைக்கின்றன. அதிக அளவில் சுற்றுலாபயணிகள் வருவதை அறியாமல் கேரளத்திலிருந்தும், வெளி மாநிலங்களி லிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்குமிடம் கிடைக்காமல் ஏமா ற்றத்துடன் திரும்புகின்றனர். மூணாறு நகரத்திலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன.


உணவுக்காக ஓட்டல்களின் முன்பு நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானவர்கள் குழுவாக வந்தவர்கள். மூணாறில் முக்கிய சுற்றுலா மையங்களான ராஜமலை, மாட்டுப்பெட்டி, எக்கோ பாயின்ட், குண்டள போன்ற இடங்களில் பயணிகள் குவிந்து வருகின்றனர். வரையாடுகளின் தங்குமிடமான ராஜமலைக்கு நுழைவு சீட்டு வாங்க காலை முதல் நீண்ட வரிசை யில் பயணிகள் காத்து நிற்கின்றனர். நயமக்காடு ஐந்தாம் மைல் வரும் பயணிகளை வனத்துறை வாகனத்தில் ஏற்றி மலையின் உச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.


மாட்டுப்பெட்டியில் படகு சவாரி செல்லவும் அதிக அளவிலான கூட்டம் காணப்படுகிறது. பெடல் போட், சிங்கார போட், பாமிலி போட் ஆகியவற்றில் ஏறி சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து திரும்புகின்றனர். குண்டள அணைக்கு வருவோருக்கு குதிரை சவாரி இனிய அனுபவம். எக்கோ பாயின்டிலும், மாட்டுப்பெட்டியிலும் உள்ள கடைகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஹோம் மேட் சாக்லேட்டுக்கும் இயற்கை முறையில் விளைந்த காரட்டுக்கும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. படகு சவாரி செல்லும்போது அணை அருகில் உள்ள புல்மேட்டில் குட்டிகளுடன் வரும் காட்டு யானைகள் சுற்றுலா பயணிகளுக்கு பயம் கலந்த உற்சாகத்தை அளித்தன.