திருவனந்தபுரம்:
விமோசன சமரத்தை (கேரளத்தை இடதுசாரிகளிடமிருந்து விடுவிக்கும் போராட்டம்) நினைவுபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி கேரளாவில் ஒருபிரச்சாரத்தை நடத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேற்கு வங்கம், திரிபுராவில் இடதுசாரி அரசுகளை வீழ்த்த மேற்கொண்ட அதே தந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காலங்கள் மாறிவிட்டன என்பதை எதிர்க்கட்சி உணர வேண்டும் எனவும் அவர் கூறினார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் கொடியேரி பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: இந்த போராட்டங்களின் முன்பு சரணடையப் போவதில்லை. இந்த அமைச்சரவை வளர்ச்சித் திட்டங்களுடன் முன்னேறவே செய்யும். மக்கள்தான் எல்டிஎப்-ஐ தேர்ந்தெடுத்தது. அந்த மக்கள் மீதுதான் எல்டிஎப் நம்பிக்கை வைத்துள்ளது. மக்களை அணிதிரட்டி அவர்களதுவன்முறையை எதிர்கொள்வோம் என்று கொடியேரி கூறியுள்ளார்.கே.டி.ஜலீலை என்ஐஏ வரவழைத்தபோது அவருக்கு அளித்த நோட்டீஸ் வெளியானது. சாட்சியமளிக்க அவர் அழைக்கப்பட்டதாக அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிபிஎம்-ஐ தங்கக் கடத்தல் வழக்கோடுஇணைப்பதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சுங்கம் மற்றும் என்ஐஏவால் கைது செய்யப்பட்டவர்கள் பாஜக, முஸ்லிம் லீக், யுடிஎப் தொடர்புடையவர்கள். விசாரணை பாஜக தலைமையை எட்டியபோது கவனத்தை திசைதிருப்ப திட்டமிடப்பட்டதே போராட்டங்கள் என்று கொடியேரி கூறினார்.
விசாரணையிலிருந்து எல்டிஎப் அரசு பின்வாங்கவில்லை. ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பல உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராக விசாரணை வந்தபோது அவர்கள் மேற்கொண்ட நிலைப்பாடு சிபிஐயால் அவர்களை நெருங்க முடியாது என்பதாகும். மேற்கு வங்கத்தில், மம்தா அரசாங்கமும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதில் எல்டிஎப் ஏற்றுக்கொண்ட கொள்கை ஒரு சுதந்திரமான விசாரணையை நடத்தட்டும் என்பதாகும். தங்கக் கடத்தல் வழக்கில் முறையான விசாரணை நடத்தக் கோரிமுதல்வர் பினராயி விஜயன்தான் மத்திய அரசுக்குகடிதம் எழுதினார். என்ஐஏ வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் முதல்வரின் நிலைப்பாட்டைப் பாராட்டினார்.எதிர்க்கட்சி ஒவ்வொரு நாளும் ஒரு விசயத்தைக் கூறுகிறது. பின்னர் அது மாற்றப்படுகிறது. தங்கக் கடத்தலில் கே.டி.ஜலீலுக்கு தொடர்பு இருப்பதாக கூறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இறுதியாகக் கூறியுள்ளார். பின்னர் நெறிமுறை மீறல் இருப்பதாக கூறினர்.குர்ஆன் விநியோகத்திற்கு எதிரான பிரச்சாரம்அடுத்தது. குர்ஆனை ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஜலீல் கேட்டு வாங்கவில்லை.
குர்ஆன்இங்குள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்திற்கு வந்துள்ளது. வக்ப், சிறுபான்மை நலஅமைச்சராக மட்டுமே ஜலீல் தலையிட்டார். இந்தியாவில் குர்ஆன் தடை செய்யப்படவில்லை. ஆயினும்கூட ஆர்எஸ்எஸ் பிரச்சாரத்தில் ஏன் யுடிஎப் இணைகிறது என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.இத்தகைய குறுகிய கால ஆயுள் கொண்ட பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் யுடிஎப் வன்முறை போராட்டத்தில் இறங்கியுள்ளது. போராட்டம் நடத்த யாரையும் கண்டுபிடிக்க முடியாதபோது காவல்துறையினரைத் தாக்குவது. குண்டர்களை அணிதிரட்டுவது- இதுதான் இப்போது நடக்கிறது. கேரளாவில் ஒரு போலீஸ்காரரைக் கொல்வது, அதன் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்த வழிவகுத்து தியாகிகளை உருவாக்குவது என்கிற நோக்கத்துடன் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறித்து மிக அதிகம் புகார் கூறப்பட்ட கட்சி காங்கிரஸ் கட்சியாகும். சிவகுமாரையும் சிதம்பரத்தையும் விசாரித்து சிறையில் அடைத்தபோது அமலாக்கத்துறையை விமரிசித்தது காங்கிரஸ் தான் என்றும் கொடியேரி கூறினார்.
நாட்டிலேயே காங்கிரஸ் அல்லாத முதலாவது அரசை 1957 இல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தது. இஎம்எஸ் தலைமையிலான அந்த அரசு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதலாவது அரசு என்கிற பெருமையும் பெற்றிருந்தது. நிலச்சீர்திருத்தம், கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளில் முன்னுதாரணமான பல்வேறு திட்டங்களை அந்த அரசு அமல்படுத்தியது. ஏழைகளுக்கு உதவிய அந்த அரசை கவிழ்க்க திட்டமிட்டு ‘விமோசன சமரம்’ (விடுதலைப் போர்) காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்டு, கேரளம் வன்முறைக்களமாக்கப்பட்டது. அதன் மூலம் இஎம்எஸ் அரசை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கலைத்தது. நாட்டிலேயே மாநில அரசை கலைத்த முதலாவது ஜனநாயக படுகொலை இதுவாகும். அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்க இப்போது காங்கிரஸ் கட்சியுடன் பாஜகவும் களமிறங்கி உள்ளது.