tamilnadu

img

4 நாட்களில் கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்ட காசர்கோடு மருத்துவக் கல்லூரிக்கு 25 வல்லுநர்கள்

திருவனந்தபுரம், ஏப். 5- காசர்கோடு மருத்துவக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உட்ளிட்ட 25 பேர் கொண்ட வல்லுநர்கள் காசர்கோடுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ஞாயிறன்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா வழியனுப்பி வைத்தார். காசர்கோடு மருத்துவக் கல்லூரியின் நி்ர்வாகப் பிரிவு கட்டிடத்தில் நவீன கொரோனா சிகிச்சை மையம் அமைந்துள்ளது. 4 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டத்தின் முதல் தளத்தில் உள்ள வார்டுகளில் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு தேவையான உபகரணங்கள், கட்டில்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டாவது தளத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் ஓய்வெடுப்பதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.  

மருத்துவக் கருவிகள், படுக்கைகள் மற்றும் தளவாடங்கள், மருந்துகள் போன்றவற்றுக்காக ரூ.7 கோடியை அரசு ஒதுக்கியது. 200 படுக்கைகள், 90 கட்டில்கள், தீவிர சிகிச்சை பிரிவுக்கான 12 சிறப்பு கட்டில்களும் தற்போது வந்துள்ளன. கட்டடத்தின் 3 தளங்களில் சிறப்பு மருத்துவமனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, இவை புறநோயாளிகள் பிரிவுகளுக்கான அறைகளாக அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா நோயாளிகளையும், கண்காணிப்பில் உள்ளவர்களையும் தங்க வைப்பதற்காக மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 870 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. அதில் 300 படுக்கைகள் இங்குள்ளன. காஞ்ஞாங்காடு மாவட்ட மருத்துவமனை, காசர்கோடு பொது மருத்துவமனை, பனத்தடி தாலுகா மருத்துவமனை, பதியடுக்கா, பெரியா சமூக சுகாதார மையங்கள் போன்றவை கொரோனா சிகிச்சை மையங்களாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளாகும்.