கவுகாத்தி:
குடியுரிமையை மத அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகளும், பாகிஸ்தான், வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலோர் வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளதால், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தங்களைப் பாதிக்கும் என வடகிழக்குமாநில மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதனடிப்படையில், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, அருணாசலப்பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் அமைப்புக்கள் (நெசோ) தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால், இந்த மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக கடைகள், வணிகநிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள்,நிதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக தேர்வுகள், முழு அடைப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. சாலை போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது பல இடங்களில் கண்டன பேரணிகள் நடந்து வருகின்றன. ஆளுநர் மாளிகைகள் முன்பு மசோதா நகல் எரிப்பும், அதையொட்டி போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்களும் நடந்துவருகின்றன. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இம்மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.