tamilnadu

img

கர்நாடகத்திலும் பிராமணர் - பிராமணர் அல்லாதார் சர்ச்சை

உடுப்பி:
பிராமணர் அல்லாதவர் என்பதற்காக உதவிப் பேராசிரியர் ஒருவரை அன்னதானக் கூடத்திலிருந்து வெறியேற்றிய சம்பவம், கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மணிப்பாலைச் சேர்ந்தவர் வனிதா ஷெட்டி. உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி உடுப்பியிலுள்ள கிருஷ்ணா மடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு அன்னதானம் வழங்கப்பட்டதால், எல்லோரையும் போல அவரும் பந்தியில் அமரச் சென்றுள்ளார்.அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய நபர்கள், கீழ்த்தளத்தில் பிராமணர்கள் சாப்பிடுவதற்கு மட்டுமே அனுமதி என்றும், பிராமணர் அல்லாதவர்களுக்கு மேல்தளத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு செல்லுமாறும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான வனிதா ஷெட்டி, சாப்பிடாமலேயே திரும்பி விட்டார்.

இதுதொடர்பான தகவல் வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். ஒரு பக்தையை- அதுவும் பேராசிரியை ஒருவரை அவமதிப்பதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பினர். உடுப்பி மடத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் புகார்களும் அளித்தனர். “பிராமணர்கள் - பிராமணர் அல்லாதவர்கள் என்று பாரபட்சம் காட்டும் நடவடிக்கைக்கு அரசு தடை விதிக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது” என்று ‘கர்நாடக கோமு சவுதார்தா வேதிகா சங்கம்’ என்ற அமைப்பும் கொதித்து எழுந்தது.
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை; எனினும், உணவு உண்ணும் இடத்தில்கூட பாரபட்சம் காட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், அன்னதானக் கூடத்தில் பிராமணர் அல்லாதவர் என்பதற்காக பேராசிரியை ஒருவர் அவமதிக்கப்பட்டதற்கு, உடுப்பி ஸ்ரீகிருஷ்ணா கோயில் மடாதிபதி ஸ்ரீவித்ய வல்லப தீர்த்த சுவாமிஜி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில், ஏனைய 7 மடாதிபதிகளுடன் கலந்துபேசி நிரந்தரமாக இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.