செங்கல்பட்டு,நவ. 6 காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மேலேரி பக்கத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது தற்போது அந்த நிறுவனம் மத்திய அரசாங்கத்தால் போதிய நிதி ஒதுக்காததால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 594 கோடி ரூபாய் செலவில் ரேபிஸ் உள்ளிட்ட முக்கிய நோய்களுக்கான தடுப்பூசி தயாரிப்பதோடு ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது இந்நிறுவனத்தில் ஆண்டுக்கு 285 மில்லியன் தடுப்பு ஊசிகள் தயாரிக்க வேண்டும் என்பது திட்டம் ஆனால் இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காததால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. இதை தவிர ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் என 174 ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் ஊழியர்கள் செல்லும் போக்குவரத்து வாகனங்களில் திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் ஊழியர் குடியிருப்புக ளுக்கான வசதி நிறுத்தப்பட்டதாக வும் குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த 9 மாதங்களாக எந்திரங்கள் செயல்படாமல் உள்ளதால் எந்திரங்கள் பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஊழியர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் பேசுவதற்கு தயங்கினாலும் நம்மிடம் இந்த தகவல்களை உறுதி செய்கின்றனர். மேலும் கடந்த நான்கு மாதகாலமாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் நிறுவனத்தின் நிலை குறித்து குடியரசுத் தலைவர் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினால் வேறு வேலை பார்த்துக் கொள்ளுமாறு நிறுவனம் கூறுவதாகவும் தொழிலாளர் நலத்துறையில் புகார் அளித்தும் பலனில்லை என்றும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேநேரம் உயர்தர கட்டமைப்புகளை பெற்றுள்ள இந்நிறுவனத்தை தனியாரிடம் விற்க அரசு முயல்வதாக இங்கு பணி செய்யும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.