articles

img

பாட்டாளிகளுக்காக கூவிய குயி.ல் - காசாவயல் கண்ணன்

பாட்டாளிகளுக்காக கூவிய குயில் - காசாவயல் கண்ணன்

பாட்டாளிகளின் பாட்டாளியே கலை இரவுகளின் கூட்டாளியே  மண்ணில் கூவி விண்ணில் மறைந்த கரிசல்குயிலே ...  அஞ்சல் துறையில்  இருந்த போது  இல்ல கதவுகளை தட்டி கடிதங்கள் கொடுத்திருப்பாய்  இசை துறைக்கு வந்த போது பல இதயக்கதவுகளை தட்டி பாடல்களை கொடுத்தாய்  இடதுசாரி மேடைகளில் கூவிய பல குயில்கள் கமர்சியல் குயில்களாகி கானம் பாடுகையில்  நீ கடைசி வரையில் கரிசல்குயிலாவே சித்தாந்தம் பாடினாய்.  பாட்டாளிகளின் பாட்டாளியே கலை இரவுகளின் கூட்டாளியே ...  பொதுவாய் கூட்டம் சேர்க்க பாடச் சொல்வார்கள் பாடல் கேட்கவே கூட்டம் கூடியதெல்லாம்  உனக்குமட்டும் தான் தோழா ...  நீ குரலில் உருகுவாய் உன் குரலால் எங்களை உருக்குவாய் சாதிக் கொடுமைகளை பாடுவாய்  சாதித்த தலைவர்களை பாடுவாய் .  முக்கால் மணி நேரம் வியர்க்க விறுவிறுக்க ஆற்றிய உரைவீச்சுகளை மூன்று நிமிட பாடலில் முந்தி காட்டுவாய் மண்ணின் இசை  மக்கள் இசை என கூவ வந்த குயில்கள் எல்லாம் கடல் கடந்து பறந்து காசு பார்க்கையில் கடைசி வரையில் குடிசைகளின் மேலிருந்து கூவிய  குயில் நீ மட்டும் தானே தோழா ...  அவருக்குப் பின் இவர் இவருக்குப் பின் அவர் என மார்க்கெட்டுகள் மாறிக்கொண்டே இருக்கும்  மரணக் கட்டு வரும் வரைக்கும் மார்க்கெட் குறையாத மார்க்சிய பாடகன் நீ  இப்போது நீ எங்களோடு  உருவமாய் இல்லை அவ்வளவுதான் அரங்கத்தில்  பல உதடுகள் உன் பாடல்களை முணுமுணுக்கின்றன பல இதயங்கள்  உன் நினைவுகளை  அசை போடுகின்றன.   இன்னும் சொல்லப்போனால் இங்கு எங்கோ இருந்து  எங்கள் வரிகளுக்கு  மெட்டு போட்டுக் கொண்டிருப்பாய்  காற்றின் திசைகளில் தீராது உன் குரல்  ஒலித்துக் கொண்டே இருக்கும்!