அவள் பெயர் தான்யா! - ஆர்.பத்ரி
சோவியத் நாட்டிற்குள் நுழைந்த ஜெர்மானிய நாஜிப் படைப்பிரிவின் அதி காரிகளில் ஒருவனான கார்ல் பையர் லைன் தனது குறிப்பேட்டில் இவ்வாறு எழுதி யிருந்தான்.
“ வீரம் மிக்க சோவியத் மக்களில் அந்த இளம் வீராங்கனை உறுதியாக என் முன்னே நின்றிருந்தாள். துரோகம் என்ற சொல்லின் அர்த்தம் அவளுக்கு தெரியாது. குளிரினால் நீலம் பாரித்துப் போனாள். அவளது காயங்களிலிருந்து குருதி வழிந்து கொண்டி ருந்தது. ஆனால் அவளது உறுதியை எங்க ளால் குலைக்கவே முடியவில்லை. தூக்கு மேடையில் நின்றிருந்த போதும் அவளது சிந்தனை நாட்டைப் பற்றியே இருந்தது. மர ணத்தின் தருவாயில் கூட தன் நாடு விரை வில் பெறப்போகும் வெற்றியை வாழ்த்தி னாள்..”
அவள் பெயர் தான்யா.. ஆம். அப்படித்தான் அவள் அறியப்பட்டி ருந்தாள். தனது பத்தாம் வகுப்பு தேர்வை முடிந்திருந்த அந்த ஜூன் மாதத்தில் ஹிட்ல ரின் படைகள் சோவியத்துக்குள் நுழைந்தி ருந்தன. தாய் நாட்டை காக்கும் போரில் தானும் ஒரு வீராங்கனையாக சோவியத் தின் கொரில்லா படையில் சேர்ந்தாள் தான்யா.. போர்க்களத்திற்கு செல்லும் முன் தன் தாயிடம் தான்யா பேசிய வார்த்தை கள் இவை.. “அழ வேண்டாம் அம்மா.. ஒன்று நான் வீராங்கனையாக வென்று திரும்புவேன். அல்லது வீராங்கனையாகவே களத்தில் மடிவேன். ஒரு போதும் போர்க்களத் திலிருந்து பின்வாங்க மாட்டேன்.”
பின்வாங்க மாட்டேன்... பெத்ரிஷேவோ எனும் இடத்தில் இருந்த கொரில்லா படைப் பிரிவில் சேர்த்துக் கொள்வதற்கு முன்பாக கமாண்டர் ஒரு வர் தான்யாவிடம் சில கேள்விகளை எழுப்பி னார். ‘நீங்கள் பயப்படவில்லையா..? இல்லை. நான் பயப்படவில்லை.. காட்டில் இரவில் தனிமையிருப்பது உங்களை அச்சமடைய செய்யும்.. பரவாயில்லை. பார்த்துக் கொள்கி றேன். ஒருவேளை ஜெர்மானியர்கள் கை யில் சிக்கினால் அவர்களின் சித்திரவதை கொடூரமாயிருக்குமே.. நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால் போர்க்களத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்.. “
மரணத்தின் போதும் புத்துணர்ச்சி
இத்தகைய உறுதியோடு போர்க்களத் தில் நாஜிப்படைகளை எதிர் கொண்ட தான்யா ஒரு நாள் அவர்களிடம் மாட்டிக் கொண்டாள். நாஜிப்படை தான்யாவை ஒரு பொது சதுக்கத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது. தூக்கிலிடப்பட்ட தான்யாவின் உடல் ஒரு மாத காலத்திற்கு அங்கேயே காற்றில் அலைந்த படி தொங்கிக் கொண்டி ருந்தது. மரணத்தின் போதும் கூட அவ ளது அழகிய முகம் தனது புத்துணர்ச்சி யையும், ஆழ்ந்த அமைதியின் வெளிப் பாட்டையும் பெற்றிருந்தது.
அழகிய சிந்தனைகள்
தான்யாவின் மரணத்திற்கு பிறகு கிடைத்த அவளது குறிப்பேடுகள் கிடைத் தன. அதில் கவிஞர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைகளை ஆங்காங்கே எழுதி யிருந்தாள்.. ‘மனிதர்களிடம் உள்ள ஒவ்வொன்றுமே அழகாகத்தானே இருக்க வேண்டும். அவர் களது முகம், அவர்களது ஆடைகள், அவர் களது ஆன்மா அல்லது சிந்தனைகள்’ எனும் ஆண்டன் செக்காவின் வரிகளும், ‘ கம்யூனிஸ்டாக இருப்பது என்பதன் பொருள் துணிவது, சிந்திப்பது, ஆசைப் படுவது, வீரமாக இருப்பது’ எனும் மாயக்கோவ்ஸ்கி வரிகளும், ‘அன்பில்லாமல் முத்தமிடுவதை விட சாவது நல்லது’ எனும் செர்னிஷேவ்ஸ்கி யின் வரிகளும் அவளது குறிப்பேட்டின் பக்கங்களை நிறைந்திருந்தன.
உயர்ந்த லட்சியங்களுக்கான...
லெனின் மீதான அவளது சிந்தனை கள் விஷேசத்தன்மையுடனும் நம்பிக்கை யுடனும் எழுதப்பட்டிருந்தன. மேலும் எழு தப்பட்டிருந்தது. ஷேக்ஸ்பியரின் “ ஒத்தெல்லோ “ வில் உண்மையினும் அறத்தின் தூய்மையினும் உயர்ந்த லட்சி யங்களுக்கான ஒரு மனிதனுடைய போராட்டத்தை நாம் காண்கிறோம். ‘ஒத்தெல்லோ’ வின் லட்சியம் உண்மை யான, பெரும் காதலின் வெற்றியாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, ஜப்பானின் ஹிரோஹிட்டோ ஆகியோரின் நாஜி - பாசிசப் படைகளுக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டத்தில் உயிரிழந்த முப்பது லட்சம் சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் தான்யாவும் ஒருவர்.. உலகை பாசிச அபாயத்திலிருந்து பாதுகாத்த செஞ்சேனையின், சோவியத் மக்களின் தியாகம் மகத்தானது. இரண் டாம் உலகப் போரில் சுமார் இரண்டு கோடி மக்களை இழந்து உலகை பாதுகாத்தது சோவியத் யூனியன்.. பதினைந்து நாட்களில் சோவியத்தை நிர்மூலமாக்கி விடுவேன் என ஆண வத்தோடு கொக்கரித்த ஹிட்லரை புறமுது கிட்டு ஓடச் செய்து, ஜெர்மனியின். ரீச்ஸ்டாக் கட்டடத்தில் செங்கொடியை ஏற்றி பாசிசத்தை வெற்றி கொண்ட நாள். மே 9, 1945 பாசிசத்தை வீழ்த்திய அந்த மகத்தான நாளைத்தான் உலகம் இப்போது கொண்டாடிக் கொண்டி ருக்கிறது.. இன்று பாசிசம் மீண்டும் உல கில் தலை தூக்குகிறது. செங்கொடியை கையில் ஏந்தி போராடுகிற கம்யூனிஸ்டு கள் மீண்டும் ஒரு யுத்தத்தை மேற்கொண்டு பாசிசத்தை வீழ்த்துவது அவசியம் என்பதை இந்த நாள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது..
அவளது உண்மைப் பெயர்...
தான்யாவின் மரணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து சோவியத் நாளே டான ‘ பிராவ்தா ‘ பத்திரிக்கை பின்வருமாறு எழுதியது.. பெத்ரிஷேவோவில் நாஜிக்களால் கொல்லப்பட்ட அந்த இளம் வீராங்கனை யின் உண்மை பெயர் ஸோயா கஸ்தெம்யான்ஸ்கயா.. தனது அடையா ளத்தை மறைக்க அவள் தனக்காக சூட்டிக் கொண்ட கற்பனை பெயரே தான்யா.. ஸோயாவின் ஒளிரும் உருவம் ஒரு நட்சத்திரம் போல மின்னுகிறது. ஸோயா வின் கதை வாய்மொழியாக பரவியது. அவளைப் பற்றிய சிந்தனைகள் போர் முனையில் நின்றிருந்த மக்களுக்கு புதிய வலிமையை தந்தது. மக்கள் போரிட்டார் கள்.. வெற்றி பெற்றார்கள்.... பாசிசத்தை வீழ்த்திய கம்யூனிஸ்டு களின் வீரம் செறிந்த வரலாற்றை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வோம். பாசிச அபா யத்திலிருந்து மக்களை பாதுகாப்போம்.