காஞ்சிபுரம், ஏப்.13-காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச் சுவரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர்தனபாலை விமர்சித்து பேனர் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17வது மக்களவைக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, அமமுக, கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சுவரில் திடீரென மர்ம நபர்கள் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் சபாநாயகர் தனபாலை விமர்சித்து பேனர் வைத்திருந்தனர். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தினந்தோறும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். போஸ்டர், பேனர் அடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஈபிஎஸ், ஒபிஎஸ், சபாநாயகர் தனபால் படங்கள் மட்டும் போட்டு அதற்குக் கீழே மார்க்கர் பேனாவால் கையால் எழுதி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அதில் முதல்வர் இ.பி.எஸ் என்ற பெயருக்கு மேலேஆள்கடத்தல், கொலை, கொள்ளை, காட்டிக் கொடுத்தவன் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. அதற்குக் கீழே குறுக்கு வழியில் ஆட்சி செய்பவனே பதில் சொல் இது அம்மா ஆட்சியா. நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில் குழாய் திட்டத்தை எதிர்த்தவர் அம்மா. வர்தா புயலுக்கு வாய் திறக்கல - அந்த மோடிஆட்சி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கேள்வி கேட்கல - இந்த மோடிஆட்சி என்பன உள்ளிட்டபல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. மேலும், துணை முதல்வர் ஓ.பி.எஸ் படத்தைப் போட்டு பெயருக்கு மேலே, கூட்டிக்கொடுத்தவன், மணல் திருடன், பச்சோந்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சபாநாயகரையும் விமர்சனம் செய்து பேனர் வைக்கப்பட்டிருந்தது.