tamilnadu

விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி, ஏப். 18- கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆரணி உள்ளிட்ட மூன்று மக்களவை தொகுதியில் அடங்கிய 11 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு சில அசம்பாவித சம்பவங்களுடன் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தொகுதிகளில் மொத்தம் 1,659 இடங்களில் 3,277 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 364 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. 1,497 இடங்களில் வெப்கேமரா மூலம் கண்காணிப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 673 அலுவலர்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இம்மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 25 விழுக்காடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டு இருந்தன.ஆனாலும், கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் சிறுநாகலூர், தொட்டியம், அணைக்கரைகோட்டாலம் போன்ற இடங்களிலும், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் கண்டமானடி, திருமுண்டீஸ்வரம் என்கிற கிராமம், செங்குறிச்சி என பல்வேறு இடங்களில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நேரங்களில் இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. கட்டுமானடி, செங்குறிச்சி ஆகிய இடங்களில் வாக்காளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதேபோல திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் அரும்பட்டு கிராமத்தில் வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடிக்கு சென்ற இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று வாக்களிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் வாக்குச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை கலைத்தனர்.அதேபோல், திண்டிவனம் 6, 32, 33 ஆகிய வார்டுகளில் வசிக்கும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் 300க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாக்குச்சாவடி முன்பு வாக்களிக்க உரிமை கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் துரை. ரவிக்குமார் இப்படி பல்வேறு இடங்களில் கொத்துக் கொத்தாக சிறுபான்மை இன மக்களின் பெயர்கள் நீக்கப்பட் டிருப்பது திட்டமிட்டு நடந்திருப்பதாகத் தெரிகிறது என செய்தியாளரிடம் கூறினார்.இது ஒருபுறம் இருக்க, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருவிழாக்கள் நடைபெறும் நாளில் தேர்தலை அறிவித்திருந்ததால் சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகப்பெரிய அளவிற்கு அவதி அடைந்தனர் பேருந்துகளின் கூரைகளின் மீது மிக ஆபத்தான முறையில் அவர்கள் பயணம் செய்ய வேண்டிய அவலம் நிகழ்ந்தது. பேருந்துகள் விடப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் கமிஷன் மற்றும் தமிழக போக்குவரத்துத் துறையின் உச்சக்கட்ட அலட்சியம் இதில் வெளியானது.