கொச்சி:
மத்திய தேர்தல் ஆணையம் (சி.இ.சி) கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிவாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 74.06 சதவீதம் பேர் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. குன்னமங்கலம் தொகுதியில் அதிக வாக்குப் பதிவாகியுள்ளது. 81.52 சதவீதம். வாக்கெடுப்பில் திருவனந்தபுரம் 61.85 சதவீதத்துடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
மாநிலத்தின் எட்டு தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2016 தேர்தலில், 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு 80 சதவீதத்தை தாண்டியது. தர்மடம், தளிப்பரம்பு, குட்டியாடு, குன்னமங்கலம், கொடுவள்ளி, குன்னத்துநாடு, அரூர் மற்றும் செர்தாலாவில் வாக்குப்பதிவு 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.113 தொகுதிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேலாகவும், 19 தொகுதிகளில் 70 சதவிகிதத்திற்கும் குறைவாகவும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அரூர் மற்றும் செர்தலாவைத் தவிர, 80 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து தொகுதிகளும் வடக்கு மாவட்டங்களில் உள்ளன. வடக்கு பகுதியில், வேங்கரா, பொன்னானி மட்டுமே 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவுகளைக் கொண்டுள்ளன. ஆனாலும், தென் கேரளாவில், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதி உட்பட ஒன்பது தொகுதிகளில் வாக்குப்பதிவு 70 சதவீதத்திற்கும் குறைந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு 77.35 சதவீதமாக இருந்தது. இவை அஞ்சல்வாக்குகளைத் தவிர்த்து புள்ளிவிவரங்கள்.