சிதம்பரம், ஆக. 5- சிதம்பரம் அருகே நர்கந்தன்குடி ஊராட்சியில் உள்ள கோழிபள்ளம் கிராமத்தில் 1926ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இங்கு குமாரமங்கலம், நடராஜபுரம், கனகரபட்டு, உத்தமசோழமங்கலம், ராதாவிளாகம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர். இன்னும் ஆறு ஆண்டுகளில் 100 ஆண்டை நிறைவு செய்ய உள்ள இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இந்த பள்ளியின் கட்டிடம் 2017 - 18ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த பள்ளி ஆங்கிலவழி பயிற்றுவிக்கும் பள்ளியாக மாற்றப்பட்டு 85 மாணவர்கள் பயின்றனர். தற்போது கட்டிட வசதியின்றி 66 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். ஐந்து வகுப்புகளும் ஒரே கட்டிடத்தில் நெருக்கடியாக இயங்கி வருகிறது. அந்த கட்டிடமும் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே புகும் சூழலில் உள்ளது தற்போது மூன்று வகுப்புகள் பஞ்சாயத்து யூனியன் கட்டிடமான அங்கன்வாடி மையத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை அரசுக்கும் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கும் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிட நலத்துறை வட்டாட்சியர் சுரேஷ்குமார் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.