கடலூர், ஆக. 24- காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நத்தமலையை சேர்ந்தவர் ராஜா (எ) பெர்னாட்ஷா (35). இவரது மனைவி மணிமேகலை (30). இவர்களுக்கு வசந்தராஜா, நிஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜாவுக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கும் தேர்தல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமா கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தனது ஆதரவாளர்கள் மூலம் ராஜாவுக்கு சொந்தமான வேனை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கேனில் வைத்திருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் ராஜாவிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.