ஸ்ரீநகர்,
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாரத்தில் இரண்டு நாள்கள் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அடுத்த இரு மாதங்களுக்கு இந்த கட்டுப்பாடு தொடரும். மாநில அரசின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும்போது, பொதுப் போக்குவரத்தை அச்சாலையில் அனுமதிப்பதில்லை என்று காஷ்மீர் மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி 270 கி.மீ. தொலைவுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் புதன், ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் பொதுமக்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர காரணங்களுக்காக அச்சாலையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் காவல் துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவின்போது அவசரப் போக்குவரத்துக்காக இதுபோன்று அனுமதி வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. மாநில அரசின் இந்த முடிவு தங்கள் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிறது என்று வணிகர்கள், சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் அரசின் இந்த நடவடிக்கை மோடியின் தோல்வியை காட்டுவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் உள்பாதுகாப்பு பராமரிப்பின் தோல்வியே இது காட்டுகிறது என்று உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.