ரோம்
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் அமெரிக்காவுக்கு அடுத்து அதிக பாதிப்பைச் சந்தித்த நாடு இத்தாலி தான். அங்கு இதுவரை 1 லட்சத்து 97 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்து 644 பேர் பலியாகியுள்ள நிலையில், 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதத்தை விட இத்தாலியில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வருவதால் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வு குறித்து அவர் விரிவாகக் கூறியதாவது," கட்டுமானத்துறை, உற்பத்தித் துறை மற்றும் மொத்த விற்பனை நிறுவனங்கள் போன்றவைகள் செயல்பட அனுமதி தரப்படும். மதுபான பார்கள், உணவகங்கள் போன்றவைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டாலும், பார்சல் மட்டுமே வழங்கப்படும். தாங்கள் வசிக்கும் பிராந்தியங்களுக்குள் மட்டும் மக்கள் முக கவசத்துடன் பயணம் செய்யலாம். இறுதிச்சடங்குகளை ஊருக்கு வெளியே நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என்றாலும் அதிகபட்சம் 15 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்" என கியூசெப் கூறி உள்ளார்.
இத்தாலியின் இந்த புதிய அறிவிப்பு ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒருவித நம்பிக்கையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.